சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை மையம், தோல் வங்கி அமைக்க ஒப்புதல்

விருதுநகர், மதுரைக்கு பரிந்துரைக்கப்படுவது தவிர்க்கப்படும்
சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை மையம், தோல் வங்கி அமைக்க ஒப்புதல்
Updated on
2 min read

சிவகாசி: சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை மையம் மற்றும் தோல் வங்கி அமைய சுகாதாரத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளதால் தீக்காயம் அடைந்த தொழிலாளர்கள் விருதுநகர், மதுரை மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பது தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இங்கு விபத்தில் தீக்காயம் அடையும் தொழிலாளர்கள் மேல்சிகிச்சைக்காக விருதுநகர், மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். கடந்த 2024 பிப்ரவரியில் மத்திய அரசு நிதியில் ரூ.32 கோடி மதிப்பில் நவீன தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டுமானப் பணிக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இதில் தேசிய சுகாதார இயக்கம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் இயக்கம் சுகாதார உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.23.75 கோடி மதிப்பில் 50 படுக்கைகள் கொண்ட நவீன தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ரூ.8.79 கோடி மதிப்பில் தாய்-சேய் நல மையம் தரைத்தளத்துடன் சேர்த்து மொத்தம் 7 தளங்களுடன் கட்டப்பட்டது.

மேலும், ஆய்வகம், டிஜிட்டல் எக்ஸ்ரே, யுஎஸ்ஜி, எக்ஸ்லாம்சியா ஆய்வகம், 26 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சைப் பிரிவு, பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவு, தாய்ப்பால் வங்கி, மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்களுக்குத் தனித்தனியாக 4 அறுவை சிகிச்சை அரங்கு ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.

மேலும் இந்தக் கட்டிடத்தில் தீக்காயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.1 கோடி மதிப்பில் மிகை அழுத்த ஆக்ஸிஜன் இயந்திரம் அமைக்கப்பட்டது. சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக சிவகாசி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மிகை அழுத்த ஆக்ஸிஜன் இயந்திரம் மூலம் 50 சதவீதம் வரை தீக்காயத்தால் பாதிக்கப்பட்டோரை முழுமையாக குணமடையச் செய்து விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.

இந்நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் தோல் வங்கி ஏற்படுத்த சுகாதாரத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளதாக சிவகாசி எம்எல்ஏவான அமைச்சர் கீர்த்தனா கடந்த வாரம் அறிவித்தார்.

இதன்மூலம் பட்டாசு ஆலை விபத்துகளில் தீக்காயத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் இனி மேல் சிகிச்சைக்காக மதுரை, விருதுநகர் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, சிவகாசியிலேயே உயர்தர சிகிச்சை வழங்க இயலும்.

தோல் வங்கி மூலம் தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் இயல்புநிலைக்கு திரும்பலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், விபத்துகளில் அதிக தீக்காயம் அடைந்தோர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினாலும், இயல்பு வாழ்க்கை வாழ்வதில் உடல்ரீதியாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மிகை அழுத்த ஆக்ஸிஜன் இயந்திரத்தில் தினசரி 45 நிமிடங்கள் சிகிச்சை அளித்தால் உள்காயம் குணமாகி விரைவில் நலம் பெறுவர். மேலும் தீக்காய சிகிச்சை மையம் மற்றும் தோல் வங்கி அமைய உள்ளதால் உயர்தர சிகிச்சை அளித்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சைக்கு பின் இயல்பு வாழ்க்கை வாழ உதவியாக இருக்கும், என்றனர்.

சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை மையம், தோல் வங்கி அமைக்க ஒப்புதல்
“அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தது ஏன்?” - பேரவையில் உதயநிதி கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in