

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே சாதிய ரீதியான கருத்து வேறுபாட்டுடன் பணிபுரிந்ததாக எழுந்த புகாரில், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் கீழவெளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 260-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி தலைமையாசிரியர் முருகன், ஆய்வக உதவியாளர் கண்ணதாசன், சமூக அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோரிடையே கடந்த 2 ஆண்டுகளாக சாதி ரீதியான கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும், இதை மாணவர்களிடமும் வெளிப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.
அதன்பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகோபால் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், தலைமையாசிரியர் முருகனை, புரந்தான் பள்ளிக்கும், ஆய்வக உதவியாளர் கண்ணதாசனை, காமரசவல்லி பள்ளிக்கும், சமூக அறிவியல் ஆசிரியர் ரவிச்சந்திரனை, பரணம் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.