

செல்போனில் பேசியபடியே ரோந்து வாகனத்தை ஓட்டிய தலைமைக் காவலர். (அடுத்த படம்) நவீன் குமார்
சென்னை: செல்போனில் பேசியபடியே ரோந்து வாகனத்தை ஓட்டிய தலைமைக் காவலர் மீது புகார் தெரிவித்த சமூக ஆர்வலருக்கு, அபராதம் விதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூகஆர்வலர் நவீன்குமார் (28). சென்னை, திருவொற்றியூரில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவசர வேலை காரணமாக, ஷேர் ஆட்டோவில் பயணியாக நுங்கம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காவல் ரோந்து வாகனத்தை தலைமைக் காவலர் ஒருவர் செல்போனில் பேசியபடியே இயக்கி உள்ளார். இதை கவனித்த நவீன்குமார் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் பிரிவு போலீஸாரை தொடர்பு கொண்டு, செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு, முதல் முறை விதிமீறலுக்கு ரூ.1,000, 2-வது முறை அதே தவறை செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். அப்போது, “போலீஸாரே இந்த தவறை செய்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுமா?” என்று நவீன்குமார் கேட்டதற்கு, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சென்னை போக்குவரத்து போலீஸாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு சம்பவம் தொடர்பான வீடியோவை நவீன்குமார் அனுப்பியுள்ளார். நடவடிக்கை எடுக்காததால் வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்று விளக்கம் கேட்டுள்ளார்.
நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர், போக்குவரத்து விதியை மீறியதாக ஜானகிராமன் என்ற போலீஸ்காரருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியேறிய சிறிது நேரத்தில், ஹெல்மெட் அணியாமல் சென்ற பழைய வழக்கு தொடர்பாக நவீன்குமார் செல்போனுக்கு அடுத்தடுத்து ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்து போலீஸாரிடமிருந்து குறுந்தகவல் வந்துள்ளது.
பழிவாங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சந்தேகமடைந்த நவீன்குமார், மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில்
முறையிட்டார். அதில் ஒரு அபராதத்தை ரத்து செய்வதாகவும், மற்றொரு அபராதத்தை கட்ட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக, காவல் ஆணையர் உயர் போலீஸ் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.