

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இடைத்தேர்தலுக்கு தடை கேட்ட வழக்கில் தீர்ப்பை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் அக்.6-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.சுதன் வழக்கு தொடர்ந்தார். ‘தங்களது அரசியல் லாபத்துக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அந்த தேர்தலுக்கான செலவை அவர்கள் முன்கூட்டியே டெபாசிட் செய்யும் வகையில் உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலத்துக்கு அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாதபடி சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்’ என அவர் கூறியிருந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதன் விவரம்:
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன்: அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த சில நிமிடங்களிலேயே ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர். அதற்கு நன்றிக்கடனாகவே தற்போது அதே தொகுதிகளில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது அவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம், அநீதி.
இது ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே, இடைத்தேர்தலுக்குக் காரணமான அவர்களை பொறுப்பாளியாக்கி, அவர்களிடமே தேர்தல் செலவை வசூலிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன்: ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேர்தல் ஆணையத்துக்கு எந்த பங்கும் இல்லை. இடைத்தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தொடரப்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.
நீதிபதிகள்: பதவியை ராஜினாமா செய்த எம்எல்ஏக்களிடம் இருந்தே தேர்தல் செலவை வசூலிப்பது, அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பாக எந்தவொரு சட்டமும் இல்லாத நிலையில், நீதிமன்றம் தலையிட்டு எப்படி சட்டத் திருத்தம் கொண்டுவர முடியும். இதுதொடர்பாக நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற முடியும். மேலும், இதுதொடர்பாக புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய அரசுக்கும் உத்தரவிட முடியாது.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடும்போது, முந்தைய தேர்தலுக்கு ஆன செலவு விவரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பலாம்.
ஆனால், தேர்தலில் மீண்டும் போட்டியிடும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடமே அந்தசெலவுத் தொகையை வசூலிக்க வேண்டும் என்று கோர முடியாது. அதேபோல, குறிப்பிட்ட காலத்துக்கு அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தடை விதிக்க வேண்டும் என்றும் கோர முடியாது. இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.