அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடலாம்: சென்னை உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழத்து பாடி துவங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி துவங்கப்படுவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே துவங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது.

இதனால், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுகிறது.

வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத் தரப்பில், ‘மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9-ஆம் தேதி பிறப்பித்த புதிய அறிவிப்பாணைப்படி, வந்தே மாதரமும், தேசிய கீதமும் அடுத்தடுத்து பாடப்பட வேண்டும். வந்தே மாதரம், தேசிய கீதம் இரண்டில், வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும்’ எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘மாநிலப் பாடல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, மாநில பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் என அதில் கூறப்படவில்லை’ எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

புதிய அறிவிப்பாணையில், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை யாரும் தடுக்கவில்லை. பின், வந்தே மாதரத்தை முதலிலும், தேசிய கீதத்தை இறுதியிலும் பாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த அடிப்படையில்தான், சுதந்திர தினத்தன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், அதைத் தொடர்ந்து வந்தே மாதரம், தேசிய கீதம் பாடப்பட்டதாக தெளிவுபடுத்தினர். பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடலாம்: சென்னை உயர் நீதிமன்றம்
மதுரை பரமசிவம் மரணத்துக்கு காரணமான காவலர்களை பணிநீக்கம் செய்க: தவாக

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in