கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on: 
1 min read

சென்னை: கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருத முடியாது எனக் கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக பதியப்பட்ட வழக்கில் கணவரை விடுதலை செய்த கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்த திருப்பூரைச் சேர்ந்ததம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்தது. இதனிடையே, கணவர் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக்கொண்டு, குடும்பத்தை கவனிக்கவில்லை எனக்கூறி மனைமுடைந்த மனைவி, கைக்குழந்தையுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கணவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கில் கணவர் மீதான குற்றச்சாட்டுகள் சரிவரநிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, அவரை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து இறந்த பெண்ணின் சகோதரர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்தது குறித்து புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வரதட்சணைக் கொடுமை தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதன்பிறகு சாட்சிகள் விசாரணையின்போது வரதட்சணை கொடுமை சேர்க்கப்பட்டுள்ளது.

இதை கவனத்தில் கொண்டு தான் கீழமை நீதிமன்றம் கணவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகவில்லை எனக்கூறி அவரை விடுதலை செய்துள்ளது. கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை மட்டுமே, இந்திய தண்டனை சட்டப்பிரிவின் 498ஏ பிரகாரம் மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருத முடியாது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாகாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
சிங்கப்பூருக்கு விமானம் ஏறும் நேரத்தில் ‘ஜெம்’ வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in