

அர்ச்சனா வீரமணி
சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் பிரபல தொழிலதிபர் ‘ஜெம்’ வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.
இந்நிலையில், வீரமணியின் மகள் அர்ச்சனா, நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்தார்.
குடியுரிமைச் சோதனை பிரிவில் அவரது பாஸ்போர்ட், பயண ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. இதற்கிடையே, இதுபற்றிய தகவல் அறிந்த எஸ்ஐடி குழுவினர் உடனே விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளை தொடர்புகொண்டு, அவரது பயணத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து, விமானத்தில் ஏறத் தயாராக இருந்த அர்ச்சனா தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் விமான நிலையத்துக்கு வந்த எஸ்ஐடி குழுவினர், அவரை எழும்பூரில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
வீரமணி மீதான வழக்கில், அவரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்த நபர்கள் குறித்தும் எஸ்ஐடி குழுவினர் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சொத்துகளை விற்று பணம் வழங்கியதாக அர்ச்சனா மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எஸ்ஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா விசாரித்து, 3 பேரையும் 2 நாட்கள் போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார்.