ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு

சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு ஆஜராகி ஆதாரங்களை வழங்க மனுதாரருக்கு உத்தரவு
ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு
Updated on: 
2 min read

சென்னை: ஜெம் வீரமணிக்கு எதி​ரான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்​றத் தேவை​யில்லை என மறுப்பு தெரி​வித்​துள்ள சென்னை உயர் நீதி​மன்​றம், வழக்கு தொடர்ந்த வாராகி இன்று சிறப்பு புல​னாய்​வுக் குழு முன்பு ஆஜராகி தன்​னிடம் உள்ள ஆதா​ரங்​களை வழங்க உத்​தர​விட்​டுள்​ளது.

சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக கைதான கிரானைட் தொழில​திபர் ஜெம் வீரமணிக்கு எதி​ரான வழக்கை சிபிஐக்கு மாற்​றக் கோரி யூடியூப​ரான வாராகி என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார். அதில், ‘சென்னை முன்​னாள் காவல் ஆணை​யர் அருணின் தலை​யீடு காரண​மாகவே ஜெம் வீரமணிக்கு எதி​ரான பாலியல் வழக்கு தொடர்​பான போலீஸ் விசா​ரணை​யில் சுணக்​கம் ஏற்​பட்​டது.

பாதிக்​கப்​பட்ட சிறுமியை போலீ​ஸார் உடனடி​யாக அடை​யாளம் காண​வில்​லை. சாந்​தி​யிட​மும் போலீ​ஸார் சரி​யாக விசா​ரணை நடத்​த​வில்​லை. இந்த விவ​காரத்​தில் ரூ.40 கோடி வரை லஞ்​சப் பணம் கைமாறி​யுள்​ளது. காவல் துறை உயர் அதி​காரி​கள் உட்பட முக்​கிய பிர​முகர்​கள் பலருக்​கும் தொடர்பு இருக்​கலாம் என்​ப​தால் இந்த வழக்கு விசா​ரணையை சிபிஐக்கு மாற்ற வேண்​டும்’ என்று கோரி​யிருந்​தார்.

நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

அதன் விவரம்:

நீதிபதி: சிறார்​கள் தொடர்​புடைய இந்த வழக்கை விசா​ரிக்க சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்து 4 நாட்​கள்​தான் ஆகின்​றன. அதற்​குள் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்​றக் கோரி மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த வழக்கு மூல​மாக மனு​தா​ரர் சுய விளம்​பரம் தேட வேண்​டாம். ‘தமிழக போலீ​ஸார் மீது நம்​பிக்கை இல்​லை’ என்று மனு​தா​ரர் கூறி​யுள்​ளார். சிபிஐ அதி​காரி​கள் ஆப்​பிரிக்​கா​வில் இருந்தா வரப்​போகிறார்​கள்?

காவல் துறை தரப்​பில் ஆஜா​ரான மாநில அரசு தலைமை குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஜான் சத்​யன்: இந்த வழக்கு தொடர்​பான ஆதா​ரங்​கள், முக்​கிய தகவல்​களை வைத்​திருப்​பவர்​கள் சிறப்பு புல​னாய்​வுக் குழு முன்பு ஆஜராகி, விசா​ரணை அதி​காரி​யிடம் அவற்றை வழங்​கலாம் என ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், இந்த வழக்​கின் தற்​போதைய நிலை குறித்து சிறப்பு புல​னாய்​வுக் குழு அக்​.1-ம் தேதி (இன்​று) அறிக்கை வெளி​யிட உள்​ளது. சிறப்பு புல​னாய்​வுக் குழு​வில் இருந்த ஐபிஎஸ் அதி​காரி கீதாஞ்​சலி தனிப்​பட்ட காரணங்​களுக்​காக விசா​ரணைக் குழு​வில் இருந்து வெளி​யேறி உள்​ள​தால் அவருக்கு பதிலாக வேறு அதி​காரி நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

நீதிப​தி: மனு​தா​ரர் வாராகி தன்​னிடம் இந்த வழக்கு தொடர்​பான ஆதா​ரங்​கள் இருந்​தால் அதை அக்​.1-ம் தேதி (இன்​று) மாலை 3 மணிக்கு சிறப்பு புல​னாய்​வுக் குழு முன்பு ஆஜராகி வழங்க வேண்​டும். ஜெம் வீரமணி வழக்கு தொடர்​பான வி​சா​ரணை அறிக்​கையை சிறப்பு புல​னாய்​வுக் குழு தாக்​கல் செய்ய வேண்​டும். இவ்​வாறு உத்​தர​விட்​ட நீதிபதி, வி​சா​ரணை​யை அக்​.7-ம்​ தேதிக்​கு தள்​ளிவைத்​தார்​.

3 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி: ஜெம் வீரமணி வழக்​கில் கைதாகி​யுள்ள சாந்​தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​மன் மற்​றும் வீரமணி​யின் உதவி​யாளர் கணேசன் ஆகியோரது ஜாமீன் மனுக்​களைத் தள்​ளு​படி செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிறுமிகளைப் பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக கிரானைட் தொழில​திபர் வீரமணி, சாந்​தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​மன், வீரமணி​யின் உதவி​யாளர் கணேசன் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர்.

இதில் சாந்​தி, மகேந்​திர சிம்​மன், கணேசன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை, நீதிபதி எஸ்​. பத்மா முன்​னிலை​யில் நடந்​தது.

அப்​போது மனு​தா​ரர்​கள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் சாய்​குமரன், “மனு​தா​ரர்​களைப் போலீ​ஸார் முறை​யாக கைது செய்​ய​வில்​லை. கைதான 24 மணி நேரத்​துக்​குள் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​த​வில்​லை. ஏற்​கெனவே போலீ​ஸார் தங்​களது காவலில் எடுத்து விசா​ரணை நடத்தி விட்​டனர் என்​ப​தால் ஜாமீன் வழங்க வேண்​டும்” என்று வாதிட்​டார்.

அதற்கு அரசு தரப்​பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் எஸ்​.அனி​தா, “குற்​றம் சாட்​டப்​பட்ட நபர்​கள் மீதான பாலியல் குற்​றச்​சாட்டு தீவிர​மானது என்​ப​தால் இவர்​களுக்கு ஜாமீன் வழங்​கக் கூடாது. விசா​ரணை ஆரம்​பக் கட்​டத்​தில் உள்​ளது. ஜாமீனில் விடு​வித்​தால் வெளி​நாடு​களுக்​குத் தப்பி சென்று விடு​வர். சாட்​சிகளை மிரட்டி ஆதா​ரங்​களை அழித்து விடு​வார்​கள்” என்று கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தார். அதையடுத்து 3 பேரின் ஜாமீன் மனுக்​களை​யும் தள்​ளு​படி செய்​து நீதிப​தி உத்​தர​விட்​டார்​.

ஜெம் வீரமணிக்கு எதிரான பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு
‘நான் தவறு செய்யவில்லை!’ - மேடையில் அழுத சத்யபாமாவுக்கு விஜய் ஆறுதல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in