

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழா கட்டுப்பாடுகளுக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மதுரையை சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழா மட்டும் நடத்த வேண்டும், அடிவாரம் முதல் மலை உச்சி வரை பிராணிகள் பலியிடக்கூடாது, மாமிசம் கொண்டு செல்லக்கூடாது, அசைவம் சமைக்கக் கூடாது, விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என தனி நீதிபதி உத்திரவிட்டார்.
இந்நிலையில் நீதிபதிகள் ஜெயாச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் தர்கா தரப்பில் இன்று (ஜன.5) வழக்கறிஞர் ஆஜராகி, சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய கோரும் மேல்முறையீடு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரபட்டது.
அதற்கு நீதிபதிகள், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கின் மேல்முறையீடு வழக்கில் நாளை தீர்ப்பு பிறப்பிக்க இருப்பதாகவும், அந்த வழக்கிலும் தர்கா தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டுள்ளது. எனவே தர்கா மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. அந்த உத்தரவுக்கு பின்னர் முறையீடு இருந்தால் முன்வைக்கலாம் என்றனர்.