

விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நகை வியாபாரியை வழி மறித்து கத்திமுனையில் சுமார் 4 கிலோ நகையை கொள்ளையடித்து சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், விராட்டிக்குப்பம் பாதை ஜனகராஜ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (43). தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் சென்னை சவுகார்பேட்டையில் தங்கக் கட்டிகளை வாங்கி வந்து, ஆபரண நகைகளாக தயாரித்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட தோடு, ஜிமிக்கி, சங்கிலி, வளையல் உள்ளிட்ட ஆபரண நகைகளுடன், சென்னைக்கு செல்வதற்காக விழுப்புரம் ரயில் நிலையம் நோக்கி, தனது இருசக்கர வாகனத்தில் நேற்று காலை புறப்பட்டுச் சென்றார். அவருடன், அவரது உதவியாளர் முரளி என்பவரும் வந்துள்ளார்.
பெருமாள் கோயில் தெருவில் கோட்டை விநாயகர் கோயில் அருகே வந்தபோது, 2 இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 5 பேர் ராஜமாணிக்கத்தை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த நகைப் பையை வலுக்கட்டாயமாகப் பறித்துள்ளனர். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வழிப்பறி செய்யும்போது மக்களிடம் கொள்ளையர்கள் சிக்கினால் அவர்களை பாதுகாக்க, கூடுதலாக 2 பைக்குகளில் ஆயுதங்களுடன் 4 பேர் வந்துள்ளதாகத் தெரிகிறது. கொள்ளைச் சம்பவத்தை அறிந்த விழுப்புரம் எஸ்பி சாய் பிரனீத் மற்றும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. சுமார் 4 கிலோ நகை கொள்ளைய டிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 கோடியாகும். இதற்கிடையில் கொள்ளை சம்பவத்தின்போது துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவலை போலீஸார் மறுத்துள்ளனர்.
கொள்ளையர்களை பிடிக்க அண்டை மாவட்ட போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகை வியாபாரி ராஜமாணிக்கம், அவருடன் பணியாற்றும் தொழிலாளர்களிடமும் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் நகர போலீஸார் வழக்கு பதிந்து 5 தனிப்படை அமைத்துள்ளனர். இந்த நகை கொள்ளை விவகாரத்தை வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு உட்படுத்தினால் முழு விவரம் தெரியவரும் என நகை வியாபாரிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.