

சென்னை: தமிழகம் முழுவதும் தெற்கு ரயில்வேக்கு சொந்தமான காலியிடங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யாத ரயில்வே தலைமைப் பொறியாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை கடந்தமுறை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் வகையில் சுற்றுச்சூழல் பாதிப்பு இழப்பீட்டுக்கான கனிமநிதியை இருவாரங்களில் விடுவிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜி.கே.முத்துகுமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வனத்துறை தரப்பி்ல் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.சுரேந்திரன், மாவட்ட வாரியாக சீமைக்கருவேலமரங்கள் அகற்றப்பட்டது தொடர்பாக தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலரின் நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதில், நீதிமன்ற உத்தரவுபடி, நீர் நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டக் குழுவின் ஒப்புதலைப் பெற்று சீமைக்கருவேல மரங்களை அகற்ற, அந்தந்த மாவட்டங்களின் கனிம நிதியை பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
மேலும், அகற்றப்படும் சீமைக் கருவேல மரங்கள் தொடர்பான தரவுகள், அவ்வப்போது ஆய்வு செய்யப்படுகிறது. அகற்றும் பணிகளில் சுணக்கம் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு பணிகளை விரைவுப்படுத்தவும் கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதிகள், ரயில்வேக்கு சொந்தமான காலிஇடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யாத ரயில்வே நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவி்த்தனர்.
பின்னர் இதுதொடர்பாக தெற்கு ரயில்வே தலைமைப் பொறியாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர். மேலும், சில மாவட்டங்களில் மரங்கள் அகற்றப்பட்டது தொடர்பான புள்ளி விபரங்களுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.