

சென்னை: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான விடுதியில் உள்ள அறைகளின் பராமரிப்புப் பணிகளுக்கு பொதுப்பணித் துறை டெண்டர்கோரியது.
கடந்த பிப்.28 அன்று கோரப்பட்ட இந்த டெண்டருக்கான படிவங்களை சமர்ப்பிக்க 2 நாட்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும் டெண்டரில் பங்கேற்க விரும்பும் ஒப்பந்ததாரர்கள் பொதுப்பணித் துறை செயற்பொறியாளரிடம் தள ஆய்வு சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி இந்த சான்றிதழ் வழங்கப்படாததால் டெண்டர் நடைமுறைகளுக்கு தடை கோரி ஒப்பந்ததாரர்கள் இருவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம். தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களுக்கு தள ஆய்வு சான்று வழங்கப்பட்டுவிட்டதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தெரிவித்தார்.
அதையேற்ற நீதிபதி, டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுத்து, டெண்டர் நடவடிக்கைகளைத் தொடர அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.