

சென்னை: கோயில் கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளில் சாதிய ரீதியாக அரசியல் செய்ய முற்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறநிலையத்துறைக்கும், போலீஸாருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
அரியலூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ``பெரம்பலூரில் உள்ள மதுரகாளி அம்மன் பொது அறக்கட்டளை நிர்வாகம் தரப்பில் மதுர காளியம்மன் கோயில், கருப்பண்ண சாமி, பெரியசாமி மற்றும் பரிவார தேவதை கோயில்களுக்கான கும்பாபிஷேகம் அக்.25-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2018-ம்
ஆண்டு தொடங்கிய திருப்பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேக பணிகளை பொது அறக்கட்டளை நிர்வாகமே நடத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.
எனவே பிற சமுதாயத்தினரின் இடையூறு ஏதுமின்றி கும்பாபிஷேகத்தை நடத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்தக்கோயில் கடந்த 1976-ம் ஆண்டு முதல் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார். அப்போது மனுதாரர் தரப்பில், கோயில் கும்பாபிஷேகத்தில் சாதி, மதம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் பங்கேற்கக்கூடாது என யாரும் தடுக்கப்படமாட்டார்கள். பட்டியலின வகுப்பினரும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, மனுதாரர் கோயில் மீது உரிமை கோரி இந்த வழக்கைத் தொடரவில்லை. மாறாக கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துகிறோம், பாதுகாப்பு கொடுங்கள் எனக்கூறித்தான் வழக்கு தொடர்ந்துள்ளார்.
எனவே கும்பாபிஷேக நிகழ்வின்போது சாதி, மதம் மற்றும் நிறத்தின் அடிப்படையில் எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை என்பதையும், கும்பாபிஷேக நிகழ்வில் யாரும் தடுக்கப்படவில்லை என்பதையும் இந்து சமய அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும்.
மனுதாரர் சார்ந்துள்ள அறக்கட்டளை நிர்வாகம் தவிர்த்து பிற சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் விழாவில் பங்கேற்க விடாமல் தடுக்கப்பட்டால் போலீஸார்
அத்தகைய விஷமத்தனமான செயல்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளில் சாதிய ரீதியாக அரசியல் செய்ய முற்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.