

அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் அருகே சுப்பிரமணியன் என்பவரின் புதிய வீட்டுக்கு செப்டிக் டேங்க் அமைக்கும் பணி 20 நாட்களுக்கு முன்பு நடந்தது.
அதன் மீது போடப்பட்டகான்கிரீட்டுக்கு பயன்படுத்தப் பட்ட பலகைகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இப்பணியில், திருவாரூர் மாவட்டம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (45), அலிவலம் பகுதியைச் சேர்ந்த தினகரன் (60), செந்துறை காந்தி நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (57) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 3 பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதுகுறித்து செந்துறை தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த னர். அங்கு அவர்களை பரி சோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்களது உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து செந்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.