கரூர் கோயில்களுக்கு சொந்தமான 3,084.95 ஏக்கர் இனாம் நிலம் பத்திரப் பதிவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

Santhanakoodu Festival
Updated on: 
2 min read

மதுரை: கரூர் மாவட்டத்தில் 4 கோயில்களுக்கு சொந்தமான 3,084.95 ஏக்கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி பத்திரப் பதிவுக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கரூர் மாவட்டத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் உள்பட 4 கோயில்களுக்கு சொந்தமான 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளன.

இந்த நிலங்களை பத்திரப் பதிவு செய்ய பதிவுத் துறை தடை விதித்தது. கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் 3071 சர்வே எண்களில் உள்ள இனாம் நிலங்கள் பத்திரப் பதிவுக்கான தடை பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நிலங்களை ஆக்கிரமித்து அனுபவித்து வந்த சுமார் 3,390 பேர் பத்திரப் பதிவுக்கான தடையை நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த மனு அடிப்படையில் பத்திரப் பதிவுக்கான தடையை நீக்கி மாவட்ட ஆட்சியர் ஜூலை 9-ல் உத்தரவிட்டுள்ளார். இது கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கையாகும். இதனால், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் முழுமையான ஆக்கிரமிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, கரூர் மாவட்டத்தில் 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்களை பதிவு செய்த பத்திரப் பதிவுத் துறை விதித்திருந்த தடையை நீக்கியும், பத்திரப் பதிவு செய்ய அனுமதி வழங்கியும் கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அதுவரை ஆட்சியரின் உத்தரவை செயல்படுத்த தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதே கோரிக்கைக்காக சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ், பி.பாஸ்கர் ஆகியோரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு இன்று விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில், ‘கோயில் நிலங்களை பதிவு செய்ய பலர் பதிவுத் துறை அலுவலகங்களில் விண்ணப்பித்து பதிவுக்காக காத்திருக்கின்றனர். இதனால் பதிவுக்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கூறப்பட்டது.

அரசு தரப்பில், ‘கோயில் இனாம் நிலங்களை மீண்டும் அரசு வசப்படுத்தவும், அவற்றை உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது’ எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘பதிவுக்கு அனுமதி வழங்கினால் சிறுக சிறுக பணம் சேர்த்து வாழ்க்கையை பணயம் வைத்து வாங்கிய சொத்தை மக்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்பாவி மக்கள் ஏமாறக் கூடாது. கோயில் நில பதிவுக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்றனர்.

அரசு தரப்பில், ‘மனுதாரர் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளார். பத்திரப் பதிவு ஏதுவும் தற்போது நடைபெறவில்லை. அப்படியிருக்கும்போது பத்திரப் பதிவு செய்யப் போவதாக கூறி நீதிமன்றத்தில் தவறான தகவலை தெரிவித்துள்ளார். இதில் உள்நோக்கம் உள்ளது’ எனக் கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‘எந்த உள்நோக்கமும் இல்லை. பதிவுக்கு அனுமதித்தால் வழக்கு முடிந்துவிடும். இதை அனுமதிக்க முடியாது.

அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தடை விதிக்கப்படுகிறது. அப்படியிருக்கும் போது பத்திரப் பதிவுக்கான தடையை நீக்க வேண்டும் என்பதில் அரசு ஏன் இவ்வாறு ஆர்வமாக இருக்க வேண்டும். எனவே, மறு உத்தரவு வரும் வரை கரூர் கோயில் நிலங்களை பத்திரப் பதிவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அனைத்து தரப்பினரும் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவ.24-க்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.

Santhanakoodu Festival
அமெரிக்கர்கள் போரை விரும்பவில்லை என்பதையே இடைக்காலத் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது: ஈரான்

X