சேலம் அம்மாப்பேட்டை கோயில் கல்மண்டபங்களை பழமை மாறாமல் புனரமைக்க ஐகோர்ட் உத்தரவு

சேலம் அம்மாப்பேட்டை கோயில் கல்மண்டபங்களை பழமை மாறாமல் புனரமைக்க  ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கோயில் திருவிழாக்கள் நடைபெறும் நூற்றாண்டு பழமை வாய்ந்த சேலம் அம்மாப்பேட்டை கோயில் கல்மண்டபங்களை பழமை மாறாமல் புனரமைக்க, இந்து அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தில் மிகவும் பழமையான அருள்மிகு அழகிரிநாதர் சுவாமி கோயில் மற்றும் அருள்மிகு அம்பலவாண சுவாமி கோயில்கள் உள்ளன. நவாத்திரி விழாவின் போது இக்கோயிலுக்கு சொந்தமான 800 ஆண்டுகள் பழமையான கல் மண்டபங்களில் நடக்கும் 10-ம் நாள் திருவிழா ‘அம்பு போடும் திருவிழா’ என விமரிசையாகக் கொண்டாடப்படும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

ஆனால் சமீப காலமாக கோயிலுக்குச் சொந்தமான சம்பந்தப்பட்ட கல் மண்டபங்களில், திருவிழாக்கள் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை எனக்கூறி சேலத்தைச் சேர்ந்த முனைவர் ஆனந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விழாக்கள் நடத்தப்படும் கோயிலுக்குச் சொந்தமான கல்மண்டபங்களை கோயில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், அவை இடிந்து விழும் அபாய நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் இதுவரை அந்த கல் மண்டபங்களை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். சேலம் அம்மாபேட்டையில் உள்ள இரண்டு கல் மண்டபங்களையும் சீரமைத்து புதுப்பிக்க இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி பரத சக்ரவரத்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலைய துறை தரப்பில், கல் மண்டபங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறி அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது மனுதாரர் தரப்பில், தொடர்ந்து 10 ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டு வருகிறது ஆனால் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட கோயிலுக்கு சொந்தமான இரு கல் மண்டபங்களையும் பழமை மாறாமல் விரைந்து புனரமைத்து, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க இந்து அறநிலைய துறைக்கு உத்தரவிட்டார்.

சேலம் அம்மாப்பேட்டை கோயில் கல்மண்டபங்களை பழமை மாறாமல் புனரமைக்க  ஐகோர்ட் உத்தரவு
“பாமகவை கைப்பற்ற அன்புமணி பம்மாத்து” - அடுக்கடுக்காக வசைபாடிய ராமதாஸ்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in