

மதுரை: பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலை தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதித்து மாநகராட்சி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணியைச் சேர்ந்த வேலராம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ராஜஸ்தானில் இருந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் வேலைவாய்ப்புக்காக மதுரை வந்து சிலைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். சிலைகளை தயாரிக்க சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். விநாயகர் சதுர்த்தி போன்ற மத விழாக்களின்போது தெய்வங்களின் சிலை விற்பனை அதிகமாக நடைபெறும். மற்ற நாட்களில் விற்பனை அவ்வளவாக இருக்காது.
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிலை தயாரிப்பு பணியில் தீவிரமாக இருந்தபோது மதுரை மாநகராட்சி நகர சுகாதார அலுவலர் மாநகராட்சி அனுமதியில்லாமல் தொழில் செய்வதாகக் கூறி, விளக்கம் கோரி அக். 6-ல் நோட்டீஸ் அனுப்பினார். மேலும் 7 நாட்களில் மாநகராட்சியை அணுகி உரிய கட்டணம் செலுத்தி உரிமம் பெறவும் கூறப்பட்டது. இதையடுத்து மாநகராட்சிக்கு சென்றபோது அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் 7 நாள் அவகாசம் முடிவதற்குள் நாங்கள் சிலை செய்து கொண்டிருந்த வளாகத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் எந்த நிபந்தனையும் விதிக்காமல் உரிமம் வழங்க வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. இதனிடையே செப்.3-ல் சிலைகளை செய்ய பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகூல் ஆகியன பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தற்காலிக உரிமம் வழங்கப்பட்டது.
சிலைகள் தயாரிக்க 90 சதவீதம் ஜிப்சம் பயன்படுத்தப்படுகிறது. சிலைகளின் பல்வேறு பாகங்களை இணைப்பதற்கும், உடையாமல் இருப்பதற்கும் குறைந்தளவு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தப்படுகிறது. எனவே, சிலைகளை தயாரிக்க பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தக் கூடாது என்ற நிபந்தனையை நீக்கவும் தொழிலில் மாநகராட்சி அதிகாரிகள் தலையிடக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கெளரி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி,பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தி சிலை தயாரிக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சிலை விற்பனைக்கு அனுமதி வழங்கப்படுகிறது என விசாரணையைத் தள்ளிவைத்தார்.