

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 60-ல் இருந்து 65-ஆக உயர்த்தக்கோரும் கோரிக்கை தொடர்பாக 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் பொதுச் செயலாளரான பாஸ்கரன் தர்மர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழக உயர்கல்வித் துறையில் கடந்த பல ஆண்டுகளாக சீரான இடைவெளியில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால், மாநிலத்தின் பல பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் அதிகளவில் காலியாக உள்ளன.
இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது பணியில் உள்ள பல பேராசிரியர்கள் இன்னும் சில ஆண்டுகளில் பணி ஓய்வு பெறவுள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை மேலும் தீவிரமடையும். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2007-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனுப்பியுள்ள பரிந்துரைப்படி பல மாநிலங்கள் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 60-ல் இருந்து 65-ஆக உயர்த்தியுள்ளன. ஆனால் தமிழகத்தில் இன்னும் இந்த ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படவில்லை.
எனவே தமிழகத்திலும் பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 65 ஆக உயர்த்தக்கோரி கடந்தாண்டு நவ.28 அன்று தமிழக அரசுக்கு மனு அளித்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என அதில் தெரிவித்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தாட்சாயிணி ரெட்டியும், அரசு தரப்பில் வழக்கறிஞர் கே. சதீஷூம் ஆஜராகி வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் எழுப்பியுள்ள கோரிக்கை பரிசீலனக்குரியதாகவே உள்ளது. இதுதொடர்பாக அவர் கடந்தாண்டு அளித்துள்ள மனு இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60-ல் இருந்து 65 ஆக உயர்த்தக்கோரும் மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசு 8 வார காலத்துக்குள் பரிசீலித்து சட்டப்படி முடிவெடுக்க வேண்டும்’’ என உயர் கல்வித்துறைச் செயலருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.