

மதுரை: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக அரசு வேலை வழங்கு தடை கோரி மீண்டும் வைத்த முறையீட்டை ஏற்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுத்துவிட்டது.
மதுரை தெற்குவாசலைச் சேர்ந்த சீனி அகமது, நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வு முன்பு இன்று ஆஜராகி, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு குடும்பத்திலும் தகுதியின் அடிப்படையில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தெரிய வருகிறது.
அவ்வாறு வழங்கப்பட்டால், அது டிஎன்பிஎஸ்சி, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அல்லது பிற சட்டப் பூர்வ பணியாளர் தேர்வு முறையை பின்பற்றாமல் அரசுப் பணியை விரும்புவோருக்கு வழங்குவதாக அமைந்து விடும்.
எனவே கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக அரசு வேலை வழங்கும் முடிவை நடைமுறைப்படுத்த தடை விதிப்பதோடு, போட்டித் தேர்வு மற்றும் நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் அடிப்படையில் அரசுப் பணிகளை நிரப்ப உத்தரவிட வேண்டும். இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது அவ்வாறு அரசுப் பணி வழங்கப்படுவது விதிகளுக்கு எதிரானது எனில் அதனை எதிர்த்து மனுவாக தாக்கல் செய்யுங்கள். வழக்கம் போல் விசாரணைக்கு எடுக்கப்படும் எனக் கூறினர்.