கி.வீரமணி மிரட்டலுக்கு பணிந்து அறநிலையத் துறை செயலாளர் சுவர்ணா மாற்றமா? - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து சுவர்ணா விடுவிக்கப்பட்டு, சுற்றுலாத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து மத வெறுப்பாளரான கி.வீரமணியின் மிரட்டலுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பணிந்து விட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது” என பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆட்சிக்கு வந்ததும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வரும் முதல்வர் ஜோசப் விஜய், இந்து சமய அறநிலையத் துறை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுவர்ணாவை நியமித்தார். அவர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது யாருக்கும் தெரியாத நிலையில் அவரது சாதியை கண்டுபிடித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவரை ஹிந்து சமய அறநிலையத் துறை செயலாளராக நியமிப்பதா என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நேற்று ரமேஷ் பதவியேற்றார். அவரது சாதியையும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த கி.வீரமணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், செயலாளர் என இரு பதவிக்கும் பிராமணர்களை எப்படி நியமிக்கலாம் என மிரட்டல் தொனியில் அறிக்கை விட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து சுவர்ணா விடுவிக்கப்பட்டு, சுற்றுலாத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்து மத வெறுப்பாளரான கி.வீரமணியின் மிரட்டலுக்கு முதல்வர் ஜோசப் விஜய் பணிந்து விட்டாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

முதல்வராகப் பதவியேற்றதும், சென்னை வேப்பேரியில் உள்ள திராவிடர் கழக தலைமை அலுவலகத்திற்கு சென்று கி.வீரமணியை ஜோசப் விஜய் சந்தித்ததால் இந்த சந்தேகம் வலுப்படுகிறது. கி.வீரமணியின் மிரட்டலுக்கு பணிந்து ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி மாற்றப்பட்டுள்ளதால், அதிகாரிகள் இடையே சாதி பற்றிய தாக்கத்தைதான் ஏற்படுத்தும். இனி சாதி, மத அடிப்படையில்தான் நியமனங்கள், இடமாறுதல்கள் நடக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்து மத வெறுப்பாளர் கி.வீரமணியின் மிரட்டலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பணிந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது’ எனத் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன் | கோப்புப்படம்
திருமாவளவனின் 35 ஆண்டு போராட்டம்: அதிகாரத்தை பிடித்த விசிக கடந்து வந்த பாதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in