

சென்னை: அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தின் கணினி பிரிவில் 34 ஹார்டு டிஸ்க்குகள் சமீபத்தில் திருடுபோயின. மின்துறை டெண்டர், நிலக்கரி கொள்முதல் போன்றவற்றில் முந்தைய ஆட்சியில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களை அழிக்கும் சதி திட்டத்துடன் இவை திருடப்பட்டதாக குற்றம்சாட்டிய அரசியல் கட்சிகள், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தின.
இதற்கிடையே, மின்வாரியம்கொடுத்த புகாரின்பேரில், சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் கணினிகளை மேற்பார்வையிடும் ஒப்பந்த ஊழியரான அரக்கோணத்தைச் சேர்ந்த கோபிநாத்தை (31) கைது செய்தனர். இவர் கணினி ஹார்டு டிஸ்க்குகளை திருடி பெங்களூருவில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. தனிப்படை போலீஸார் பெங்களூருவுக்கு சென்று, 34 ஹார்டு டிஸ்க்குகளையும் பறிமுதல் செய்தனர்.
இவற்றை வாங்கிய கடை உரிமையாளரான பெங்களூரு தெற்கு பகுதியைச் சேர்ந்த முரளி மனோகரையும் (32) கைது செய்தனர். இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், வழக்கின் தன்மை, இதில் உள்ள பின்னணியை கருத்தில் கொண்டு, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
மின்வாரிய ஒப்பந்த ஊழியரான கோபிநாத் ஏற்கெனவே வேறு சில நிறுவனங்களில் வேலை செய்தபோதும், கணினி உதிரி பாகங்களை திருடி விற்றுள்ளார். அதுபோலத்தான், தற்போதும் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்த ஹார்டு டிஸ்க்குகளை திருடியுள்ளார். அதில் உள்ள தகவல்களை அழித்துவிட்டு, ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
மற்றபடி சதி திட்டத்துடன் செயல்படவில்லை என்று விசாரணையின்போது தெரிவித்துள்ளார். எனினும், திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்குகளில் மின்துறை தொடர்பான மிக முக்கிய, ரகசிய தகவல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. கைதான கோபிநாத், பணத்துக்காக ஹார்டு டிஸ்க்குகளை விற்றதாக கூறினாலும், இதன் பின்னணியில் பெரிய சதிவலை இருக்கலாம் என சந்தேகம் உள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை போலீஸாரின் முதல்கட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. விரைவில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்படும். போலீஸார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர். கைதான 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். சந்தேக நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.