நெல் கொள்முதலை கூட்டுறவுத் துறையில் ஒப்படைத்தால் டெல்டா இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும்: விவசாயிகள் கவலை

புலவன்காடு மாரியப்பன், வெ.ஜீவக்குமார், கே.வி.இளங்கீரன்

புலவன்காடு மாரியப்பன், வெ.ஜீவக்குமார், கே.வி.இளங்கீரன்

Updated on: 
2 min read

தஞ்சாவூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் பணியை கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைத்தால், டெல்டா மாவட்டங்களில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், அந்தந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து, வாழ்வாதாரத்தை காத்து வந்தனர்.

அதேநேரத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பு கிடைக்காமல், விவசாயத்தை மட்டுமே செய்து வந்தனர்.

இதை உணர்ந்த அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, 1972-ம் ஆண்டு தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை நிறுவினார். இந்த கழகத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்ற, காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள இளைஞர்களை தேர்வு செய்து பணி வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதுவரை விவசாயிகளிடம் இந்திய உணவுக் கழகம் செய்து வந்த நெல் கொள்முதல் பணியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மேற் கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பாதாளடி பருவத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

அதில் பருவகால பணியாளர்களாக ஆண்டுதோறும் புதியவர்களாக நூற்றுக்கணக்கானோர் தேர்வு செய்யப்பட்டு, பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நெல் கொள்முதல் பணியை, கூட்டுறவுத் துறைக்கு மாற்றம் செய்தால் டெல்டா மாவட்டங்களில் உள்ள இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு பறிபோகும். எனவே, இந்த முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என டெல்டா விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கல்லணைக் கால்வாய் பாசனதாரர் கூட்டமைப்பின் தலைவர் புலவன்காடு எம்.மாரியப்பன் கூறியது: தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு நெல் கொள்முதலை ஆண்டுதோறும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

மேலும், நெல் கொள்முதலுக்காக கிராமங்கள்தோறும் கொள்முதல் நிலையங்கள் ஆரம்பித்து, சேமிப்பு கிடங்குகள் என பல்வேறு கட்டமைப்புகளை செய்துள்ளது.

விவசாயத்தையே நம்பியுள்ள டெல்டா மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை தரும் மிகப்பெரிய துறையாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் உள்ளவர்கள் தான், தமிழகம் முழுவதும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் அமுதம் அங்காடிகள், சேமிப்பு கிடங்குகள் போன்றவற்றில் வேலை பார்த்து வருகின்றனர். எனவே, டெல்டா இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் இந்த நடைமுறையை மேற்கொள்ளக் கூடாது என்றார்.

காவிரி உரிமை விவசாய செயற்பாட்டாளர் வெ.ஜீவக்குமார்: நெல் கொள்முதல் பணியை தனியாரிடம் வழங்கும் முன்னோட்டமாக கூட்டுறவுத் துறைக்கு மாற்றம் செய்ய அரசு முயற்சி செய்கிறது.

இவ்வாறு செய்தால், நெல் கொள்முதலில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்பும் பறிபோகும்.

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன்: நெல் கொள்முதல் செய்யும் பணியை கூட்டுறவுத் துறைக்கு ஒப்படைத்தால், இந்த துறை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் சிதைந்து போகும்.

விவசாயக் குடும்பங்களில் உள்ளவர்களே பெரும்பாலும் இந்த துறையில் பணியாற்றி வரும் நிலையில், நெல் கொள்முதலை கூட்டுறவுத் துறைக்கு மாற்றினால், டெல்டா மாவட்டங்களில் உள்ளவர்களின் வேலைவாய்ப்பும் பறிபோவதுடன், வாழ்வாதாரமும் சிதைந்து போகும். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்றார்.

<div class="paragraphs"><p>புலவன்காடு மாரியப்பன்,&nbsp;வெ.ஜீவக்குமார்,&nbsp;கே.வி.இளங்கீரன்</p></div>
விவசாயிகளுக்கு அரசு சலுகை: பயிர்க்கடன் நிலுவையை செலுத்தினால் வட்டி தள்ளுபடி

X