

தகுதியற்ற ஆட்சியாளர்கள் தமிழகத்தை ஆட்சி செய்வதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக குறிஞ்சிப்பாடியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசியதாவது: ஊழலுடன் போதை பொருட்களும் அதிக அளவு புழங்கும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. குற்றப் பணத்திலும் ஊழல் பணத்திலும் சொத்து சேர்ப்பவர்கள் பாவிகள். ஸ்டாலின் அரசு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்கு ஆபத்து. வள்ளலார் பக்தர்கள் விருப்பத்துக்கு எதிராக, வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைத்து வருகிறார்கள்.
விவசாயிகள் விளைவித்த நெல்லை சரியான நேரத்தில் வாங்கத் துப்பில்லாத அரசாக இந்த அரசு உள்ளது.மத்திய அரசு நெல் சேமிப்பு கிடங்குகளை அமைக்க ரூ.300 கோடி வழங்கியது. இது யார் வயிற்றுக்கு போனது என்று தெரியவில்லை.
இது குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால் வெற்றுப் பேப்பரை காட்டுகிறார்கள். தகுதியற்ற ஆட்சியாளர்கள் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார்கள். வரும் தேர்தலில் ஸ்டாலின் அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கடலூர் அருகே உள்ள நொச்சிக்காட்டில் சிப்காட் சிறப்பு தொழிற்பேட்டை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையொட்டி அந்த கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஹெச்.ராஜா, “தொழிற்சாலைகள் அமைப்பதற்காக விளை நிலங்களைக் கையகப்படுத்துவதை ஏற்க முடியாது. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.