

படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வளவு பிரச்சினைகள், சண்டைகள் நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்தால், உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள்? அதனால் தவெக தலைவர் விஜய் நியாயப்படி, மக்கள் உணர்வுபடி பேச வேண்டும்” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
முருகப் பக்தர்கள் மற்றும் இந்து இயக்கங்கள் சார்பில் தீபப் போராட்டம் மற்றும் காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் திருப்பரங்குன்றம் முருகனை சீண்டுவதையே தன்னுடைய வேலையாக கடந்த 2 வருடங்களாக திமுக அரசு வைத்திருக்கிறது.
நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பிறகு அதை மதிக்கமாட்டேன் என்று இவர்களாகவே சட்டம் - ஒழுங்கு சீர்குலைத்து பிரச்சினையை ஏற்படுத்துவது போன்ற செயலை செய்கின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது நிச்சயம் தமிழகத்தில் 2026-சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலிக்கும்.
100 நாள் வேலை திட்டம் வந்தபோதே காந்தியின் பெயரை காங்கிரஸ் வைக்கவில்லை. அப்படி வைக்காமல் தற்போது கபட நாடகம் போடக் கூடாது. மகாத்மா காந்தியின் பெயர் இந்தியாவில் எப்போதும் எல்லா இடங்களிலும் இருக்கும். திட்டம் மாறியுள்ளதால் விக்ஷித் நாடு என்ற பெயரை கொண்டு வந்துள்ளோம். இதனை காந்தியே ஒப்புக்கொள்வார். 2016-க்கு பிறகு காந்தியின் பெயரை நாங்கள் பல இடத்தில் வைத்துள்ளோம். அதற்கான பட்டியல் எங்களிடம் இருக்கிறது. அதனை காங்கிரஸ் ஏன் பேசவில்லை?
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு எதிராக 120 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் அளித்திருக்கிறார்கள். மீதியுள்ள 423 எம்.பிக்களும் நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக இருக்கும் முருக பக்தர்கள், சிவ பக்தர்கள். அதனால் இந்தத் தீர்மானம் தோற்கும். மேலும், கையெழுத்திட்ட எம்.பிக்கள் அனைவரும் வரும் தேர்தலில் தோற்கப்போவது உறுதி.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எவ்வளவு பிரச்சினைகள், சண்டைகள் நடக்கிறது. நான் பேச மாட்டேன், வேடிக்கை மட்டுமே பார்ப்பேன் என்றால் உங்களை நம்பி மக்கள் எப்படி ஆட்சி பொறுப்பை கொடுப்பார்கள். தவறு எது, சரி எது என்பதை கூற வேண்டும். நடுவில் நின்றால் எப்படி? அதனால் தவெக தலைவர் விஜய் நியாயப்படி, மக்கள் உணர்வுபடி பேச வேண்டும்.
பாஜகவைச் சேர்ந்த சிறுபான்மையின அமைச்சருக்கு இலாகா கொடுக்கவில்லை என்று புதுச்சேரியில் பேசிய விஜய், திருப்பரங்குனறம் விவகாரத்தில் பெரும்பான்மை மக்கள் பற்றி ஏன் பேசவில்லை?
தமிழக முதல்வர் போட்டியிட்ட முதல் தேர்தலில் தோற்றார். கட்சி ஆரம்பித்த பிறகு எத்தனை முறை திமுக தோற்றுள்ளது. வரலாறு காணாத தோல்வியை 2014-ல் சந்தித்தனர். 234 தொகுதிகளில் 2 இடங்களில் மட்டுமே வென்றனர். ஆகவே, தோல்வியை பற்றி ஸ்டாலின் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
திமுகவுக்கு வேல், முருகன், சிவன், பாஜக, இந்து முன்னணி என யாரைப் பார்த்தாலும் பயம். அவர்கள் இருண்ட உலகத்தில் இருக்கின்றனர். அதனால் குன்றை பார்த்தாலும், விஜய்யை பார்த்தாலும் பயம்தான்.
சபரிமலை தீர்ப்பும், திருப்பரங்குன்றம் தீர்ப்பும் ஒன்றில்லை. இருக்கும் நடைமுறையை மாற்றியதற்காக சபரிமலை தீர்ப்பை எதிர்த்தோம். இருக்கும் நடைமுறையை பின்பற்றவே திருப்பரங்குன்றம் தீர்ப்பை ஆதரித்தோம். ஆகவே, திருமாவளவன் தீர்ப்பு நகலை படிக்க வேண்டும். தீர்ப்புகள் தவறாக சொல்லும்போது எதிர்க்கின்றோம், சரியாக வரும்போது ஆதரிக்கின்றோம்” என்று அண்ணாமலை கூறினார்.