

ஹெச்.ராஜா
காரைக்குடி: “பாஜகவில் இருந்து விலகி அரசியலில் பிரகாசித்தவர் ஒருவர் கூட கிடையாது” என அண்ணாமலையை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மறைமுகமாக விமர்சித்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அண்ணாமலை தற்போது பாஜகவில் இல்லாததால் அவரை பற்றி பேச வேண்டியதில்லை. பாஜக சித்தாந்த ரீதியிலான அமைப்பு. காங்கிரஸில் இருந்து வெளியேறியோர் அரசியலில் சிறந்து விளங்கியுள்ளனர். ஆனால், பாஜகவில் இருந்து வெளியேறி அரசியலில் பிரகாசித்தோர் என்று ஒருவர் கூட கிடையாது.
அண்ணாமலை இல்லாதபோது, கடந்த 2014-ம் ஆண்டு பாஜக கூட்டணி 19 சதவீதம் வாக்குகள் பெற்றது. அண்ணாமலை இருந்தபோது 2024-ம் ஆண்டு 18 சதவீதம் தான் பெற்றது.
தவெக அரசு சில்லுண்டிகளை சேர்த்துக் கொண்டு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. கடந்த 35 நாட்கள் ஆட்சியில் 40-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. விஜய் பொறுப்புள்ள முதல்வராக நடந்து கொள்ளவில்லை. தீய சக்தி முதல்வராக விஜய் உள்ளார். அரசியல் அனுபவம் இல்லாதோர் அமைச்சர்களாக உள்ளனர்.
பொறுப்பற்ற, தான்தோன்றித்தனமாக, மக்கள் மீது அக்கறையற்ற அரசாக உள்ளது. ஆட்சியாளர்கள் கற்பனையிலேயே திரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு முழுமையான மக்கள் ஆதரவு இல்லை. மூன்று வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பேற்று விஜய் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தவெக ஆட்சி தமிழகத்துக்கு ஒரு துரதிருஷ்டம்.
காவிரி குறுக்கே மேககேதாட்டு அணைக் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்காது. கர்நாடக அரசு கற்பனை செய்துகொண்டு பேசுவதை நாம் ஏன் தடுக்க வேண்டும்?
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பளித்து, ஏற்ற முடியாது என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினால், அதன்பின்னர் நான் பதில் சொல்கிறேன்.
சிறுபான்மையின மாணவர்கள் மத அடையாளங்கள் இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று கூற பள்ளிக் கல்வித் துறைஅமைச்சருக்கு தைரியம் இருக்கிறதா” என்று ஹெச்.ராஜா கூறினார்.