

தி.வேல்முருகன்
சென்னை: சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, அக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் படைகள் ஈரான் மீது கூட்டாக தாக்குதலை கடந்த பிப்.28-ம் தேதி நடத்தின. இதற்கு பதிலடியாக ஈரான், உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து வழியான ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியது. ஈரானின் பதிலடியால் இந்தியாவில் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்ந்தது.
கடந்த சில ஆண்டுகளில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணங்களும் ஆண்டுதோறும் அதிகரிக்கப்படுகின்றன. வாகன காப்பீடு, உதிரி பாகங்கள், டயர் விலை, ஓட்டுநர் ஊதியம், பராமரிப்பு செலவுகள் என அனைத்தும் உயர்ந்துள்ளன.
தமிழகத்தில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகின்றன. மாநிலத்துக்குள் கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், கட்டுமானப் பொருட்கள், தொழிற்சாலை உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களின் போக்குவரத்து லாரிகளை சார்ந்தே உள்ளது. இதனால் லாரி வாடகை 25 சதவீதம் உயர்ந்தது .அதன் தாக்கம் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. இதனால், குடும்ப மாதாந்திர செலவு கணிசமாக அதிகரிக்கும்.
மூலப்பொருட்கள் உயர்வால் வீடு கட்டும் செலவு மேலும் அதிகரிக்கும். விவசாயிகள் கொண்டு செல்லும் உரம், விதை, விளைபொருட்கள் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கும்.
சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்வால் சிறு வியாபாரிகளின் லாப விகிதம் குறையும். எனவே, மத்திய அரசிடம் தமிழக அரசு பேசி, சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். எரிவாயு விலை உயர்வால் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள் மற்றும் உர விலை உயர்வு, லாரி வாடகை உயர்வால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ 30 ஆயிரம் மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.