

தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை இறுதிக் கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உப்பளங்களில் ஜிப்சம் எடுக்கும் பணி தீவிர மடைந்துள்ளது. ஆனால், போதிய விலை கிடைக்காததால் உப்பு உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுக நேரி பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திப் பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள்தான் உப்பு உற்பத்திக்கு உகந்த காலம். அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதும் உப்பு சீஸன் முடிவடையும்.
அதன்படி, கடந்த ஆண்டு சுமார் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தியானது. அதேநேரத்தில், குஜராத்தில் இருந்தும் உப்பு கொண்டு வரப்பட்டதால், உப்புக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் கடந்த 2 வாரங்களாக மழை பெய்யவில்லை. இதனால் உப்பளங்களில் படிந்துள்ள ஜிப்சத்தை சேகரிக்கும் பணியை உப்பு உற்பத்தியாளர்கள் தொடங்கியுள்ளனர்.
ஏற்கெனவே உப்புக்கு போதிய விலை கிடைக்காததால் ஜிப்சம் விற்பனை மூலம் வருவாய் ஈட்டலாம் என கருதியிருந்த உப்பு உற்பத்தியாளர்களுக்கு, ஜிப்சம் விலையும் குறைந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ரூ.1,300 வரை விற்பனையாகி வந்த ஒரு டன் ஜிப்சம் தற்போது ரூ.750 என விலை குறைந்துள்ளது.
இதுகுறித்து உப்பு உற்பத்தியாளர்கள் கூறும்போது, ‘‘உப்பளங்களில் இருந்து கிடைக்கும் ஜிப்சத்தை சிமென்ட் தயாரிப்புக்கு வாங்கிச் சென்றனர். ஆனால், தற்போது ஜிப்சத்துக்கு மாற்றாக ஓமனில் இருந்து பவுடர் வடிவத்தில் ஜிப்சத்தை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால் உப்பளங்களில் இருந்து பெறப்படும் ஜிப்சம் விலை குறைந்துள்ளதால் பாதிக்கப்படுகிறோம்’’ என்றனர்.