

கும்பகோணம்: படியில் பயணம் செய்ததை கண்டித்த தலைமைக் காவலரை தாக்கியதாக உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில், கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தது. அந்த ரயிலின் ஒரு பெட்டியின் படிக்கட்டில் இளைஞர் ஒருவர் அமர்ந்து இருந்தார். அங்கு பணியில் இருந்த ரயில்வே இருப்புப் பாதை தலைமைக் காவலர் கவிதா, அந்த இளைஞரிடம் படியில் அமரக்கூடாது, உள்ளே செல்லுங்கள் என கூறினார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த இளைஞர் கவிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இளைஞரைப் பிடித்து கும்பகோணம் ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர், தஞ்சாவூர் விளார் சாலையைச் சேர்ந்த ஆகாஷ் (26) என்பதும், உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராக உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த ஆக.17-ம் தேதி தஞ்சாவூரில் மறியல் போராட்டத்தின்போது, மேற்கு காவல் நிலைய எஸ்எஸ்ஐ அப்துல் ரஹீம் என்பவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆகாஷை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.