குறியீட்டுப் படம்
சென்னை: கடந்த 2003, ஏப்ரல் 1-க்குப் பின் பணியில் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் புதிய உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியுவின் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு 1.4.2003க்கு பின்பு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்திற்குப் பதிலாக தமிழ்நாடு உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு தொழிலாளர்கள் சம்பளத்தில் மாதந்தோறும் 10 சதவீதம் செலுத்த வேண்டும். 30 ஆண்டுகள் பணியில் இருந்தால் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதம் ஓய்வூதியமாக கிடைக்கும். இத்திட்டத்தை JactoJeo உள்ளிட்ட அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு எவ்வித ஓய்வூதியமும் இல்லாத நிலையில், இந்த ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு என அரசு அறிவித்துள்ளது.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 1.9.1998-ல் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஓய்வூதியத் திட்டம் 1.9.1998க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு விருப்புரிமை அடிப்படையில் வழங்கப்படும் எனவும், 1.9.1998க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு கட்டாயம் எனவும் ஒப்பந்த சரத்து உருவாக்கப்பட்டது.
ஒப்பந்தத்திற்கு மாறாக, அரசு தன்னிச்சையாக 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் என அரசாணை வெளியிட்டது. இது ஒப்பந்தத்திற்கு விரோதமானது. இது சம்பந்தமாக சிஐடியு தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம் ஒப்பந்தப்படியான ஓய்வூதியமாகும். ஆனால், அரசு தன்னிச்சையாக அரசு ஊழியர்களுக்கு அறிவித்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை போக்குவரத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்தியது.
தற்போது அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்திற்குப் பதிலாக உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், 1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசு வெளியிட்ட அரசாணையை வாபஸ் பெற்று, 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியத்திட்டம், வருங்கால வைப்புநிதி திட்டத்திற்குப் பதிலாக உருவாக்கப்பட்டது. எனவே, தற்போது அரசு அறிவித்துள்ள உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்தி போக்குவரத்து ஊழியர்களுக்கு அமலாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
சிஐடியு சார்பாக ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும், ஒப்பந்த நிலுவைத்தொகை வழங்க வேண்டும், 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, 62 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நிலுவைத்தொகை முழுமையாக வழங்கப்படும், ஒப்பந்த அரியர்ஸ் வழங்கப்படும், ஓய்வூதியம் சம்பந்தமாக பேச நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தையில் அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
எனவே, ஒப்புக்கொண்ட அடிப்படையில் நிலுவைத்தொகை வழங்கவும், ஓய்வுபெற்றோருக்கு பணப்பலன் வழங்கவும், 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களின் ஓய்வூதியப் பிரச்சினையில் அரசு தீர்வுகாணவும் முன்வர வேண்டுமென சிஐடியு வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.