

சென்னை: ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மற்றும் 57-வது ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) தலைவர் விவேக் சதுர்வேதி தலைமை தாங்கினார். இதில், சிபிஐசி உறுப்பினர் (ஜிஎஸ்டி) சஞ்சய் மங்கல், தமிழக அரசின் வணிக வரிகள் ஆணையர் எஸ். நாகராஜன், சென்னை ஜிஎஸ்டி மண்டலத்தின் தலைமை ஆணையர் எஸ்.கே. விமலாநாதன் மற்றும் வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள், சிபிஐசி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டம் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. காலையில் நடைபெற்ற முதல் அமர்வில், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மற்றும் 57-வது ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் குறித்து வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடந்தது. அப்போது, பிரதிநிதிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
மேலும், மத்திய அரசு மேற்கொண்டு வரும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த வர்த்தகப் பிரதிநிதிகள், வர்த்தகத்தை எளிதாக்கவும், தொழில் நடைமுறைகளை மேம்படுத்தவும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, மதியம் நடைபெற்ற இரண்டாவது அமர்வில் சிபிஐசி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அப்போது பேசிய சிபிஐசி தலைவர் விவேக் சதுர்வேதி, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை சீராகவும் திறமையாகவும் தடையின்றியும் செயல்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், அரசின் வருவாயைப் பாதுகாப்பதுடன், வர்த்தக நடவடிக்கைகளை எளிதாக்குவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதும் முக்கியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.