

சென்னை: லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நாளை (6-ம் தேதி) வெளியிடப்படுகிறது. இத்தேர்வு மூலம் ஏறத்தாழ 10 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறார்கள். 2026-ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 6 தேர்வுகளில் 5 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 3 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
2 தேர்வுகள் விரைவில் நடத்தப்பட உள்ளன. கடைசியாக இடம்பெற்றுள்ள குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு அக்.6-ம் தேதி வெளியிடப்பட்டு தேர்வு டிச.20-ம் தேதி நடைபெறும் எனத் தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நாளை (6-ம் தேதி) இணையதளத்தில் வெளியிடுகிறது. பொதுவாக குரூப்-4 தேர்வில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), கிராம நிர்வாக அலுவலர், வரைவாளர், பில் கலெக்டர், வனக்காவலர் உள்ளிட்ட பதவிகள் இடம்பெறும். கடந்த 2024 குரூப்-4 தேர்வில் 4,662 காலியிடங்கள் இடம்பெற்றிருந்தன.
கடந்த 2024-ம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் குரூப்-சி நிலையிலான பணியிடங்கள் குரூப்-4 தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதோடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள காலிப்பணியிடங்களும் டிஎன்பி்எஸ்சி மூலம் நிரப்பப்படும் என அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது.
எனவே, நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள குரூப்-சி பதவிகளில் அதிக காலியிடங்கள் இருப்பதால் அந்த இடங்களும் குரூப்-4 தேர்வின் கீழ் வருவதால் நாளை வெளியிடப்படும் குரூப்-4 தேர்வு அறிவிக்கையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்எஸ்எல்சி தகுதி: குரூப்-4 தேர்வை பொருத்தவரையில் பெரும்பாலான பதவிகளுக்கு அடிப்படை கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும். ஒருசில பதவிகளுக்கு மட்டுமே பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு அடிப்படை கல்வித்தகுதியுடன் கூடுதலாக தொழில்நுட்பத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
குரூப்-4 தேர்வுக்கான அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என்ற போதிலும் முதுகலை பட்டதாரிகளும், பட்டதாரிகளும்தான் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த குரூப்-4 தேர்வுக்கு 13.89 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 11.36 லட்சம் பேர் மட்டுமே தேர்வெழுதினர். இந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என தெரிகிறது.