

தாராபுரம் தொகுதி வாக்குகள் திருப்பூர் எல்ஆர்ஜி அரசு மகளிர் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட தேர்தல் பொதுப் பார்வையாளர் சின்மய் புண்ட்லிக்ராவ் கோட்மரோ. உடன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே.
சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிந்தது. நாளை செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிட்டார். அவர் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதன்பின், முதல்வர் பதவி ஏற்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
சி.விஜய பாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 அதிமுக எம்எல்ஏக்கள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும் தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, அந்த 7 தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பைக் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், சுயேச்சை வேட்பாளர்கள் என 28 பேர் களத்தில் உள்ளனர்.
அதேபோல், தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா,அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாதக சார்பில் கார்த்திகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
எனவே, இந்த இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியான தவெக. எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சிகளும் இரு தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தவெக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் விஜய் செப்.25-ம் தேதி மதுராந்தகம் தொகுதியிலும் செப்.30-ம் தேதி தாராபுரம் தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2-ம் தேதி தாராபுரம் தொகுதியிலும் 3-ம் தேதி மதுராந்தகம் தொகுதியிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதேபோல், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், செப்.27-ம் தேதி மதுராந்தகம் தொகுதியிலும், கடந்த 3-ம் தேதி தாராபுரம் தொகுதியிலும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 2-ம் தேதி தாராபுரம் தொகுதியிலும், 3-ம் தேதி மதுரந்தகம் தொகுதியிலும் பிரச்சாரம் செய்தார். அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே, தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் செய்த முதல்வர் விஜய் நேற்று மீண்டும் அத்தொகுதியில் சாலை வலம் (ரோடு ஷோ) சென்று இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். தேர்தல் விதிமுறைகளின்படி வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாகவே பொதுப் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிக்கப்பட வேண்டும். அதன்படி, இரு தொகுதிகளிலும் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இடைத்தேர்தலை முன்னிட்டு 2 தொகுதிகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
அதன்படி, நேற்று மாலை 6 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறும் நாளான 6-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை பிரச்சாரம், பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த அரசியல் கட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இரு தொகுதிகளிலும் வெளியாட்கள், கட்சி பணியாளர்கள் மற்றும் வாக்காளர் அல்லாதவர்கள் நேற்று மாலை 6 மணிக்குப் பிறகு தொகுதிகளை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள், தங்கும் விடுதிகள், இல்லங்கள் ஆகிய இடங்களில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். வாக்குப் பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் அக்.9-ம் தேதி எண்ணப்படுகின்றன.