ஆர்.கே.நகர் தொகுதியை ஆட்கொள்பவர் யார்..?

ஆர்.கே.நகர் தொகுதியை ஆட்கொள்பவர் யார்..?
Updated on
2 min read

தமிழகத்தின் மிகப்பெரிய காசிமேடு மீன்பிடி துறைமுகம் அமைத்திருக்கும் சென்னை கடலோர தொகுதியாக ஆர்.கே.நகர் விளங்குகிறது.

2014-ல்நடைபெற்ற இடைத்தேர்தல், 2016-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானதால், விஐபி அந்தஸ்தை இத்தொகுதி பெற்றிருந்தது.

இத்தொகுதியில் மீனவர்கள் மற்றும் மீன் தொழிலைச் சார்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாகவும் மீனவர்கள் உள்ளனர். இத்தொகுதியில் பூர்வீகமாக வசிப்பவர்கள் அதிகம். பெரும்பாலான பகுதிகள் மக்கள் அடர்த்தி மிகுந்த, குறுகிய தெருக்களைக் கொண்டவையாக உள்ளன.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

பெரம்பூர் தொகுதியில் இருக்கும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால் அதிக பாதிப்பு இத்தொகுதி மக்களுக்குத்தான்.

இத்தொகுதியில் மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்றவாறு கழிவுநீர் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை.

அதனால் அங்கு உருவாகும் அதிகப்படியான கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் பக்கிங்ஹாம் கால்வாயில் விடப்படுவதால், அப்பகுதி சுகாதாரக்கேட்டின் பிடியில் சிக்கியுள்ளது.

இதன் பாதிப்பு நேப்பியர் பாலம் வரை நீள்கிறது. பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் செல்வதால், அப்பகுதியில் கொசுத்தொல்லை பெருந்தொல்லையாக உள்ளது.

வேட்பாளர்களின் பின்புலம்

இத்தொகுதியில் கடந்த முறை வெற்றிபெற்ற ஜெ.ஜான் எபினேசர் திமுக வேட்பாளராக மீண்டும் களம் இறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ், தவெக சார்பில் மரிய வில்சன், நாம் தமிழர் கட்சி சார்பில் வெண்ணிலா தாயுமானவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இத்தொகுதியில் இதுவரை நடைபெற்ற 12 தேர்தல்களில் 7 முறை அதிமுக, 3 முறை திமுக, 2 முறை காங்கிரஸ், ஒருமுறை சுயேச்சை (டிடிவி.தினகரன்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுகவின் கோட்டையாக இருந்த இத்தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெ.ஜான் எபினேசர் வெற்றி பெற்று, அதிமுகவின் தொடர் வெற்றியை உடைத்து, தொகுதியை திமுக வசமாக்கினார்.

இவர் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.19.70 கோடியில் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகத்தை கொண்டு வந்துள்ளார். பல்வேறு பூங்காக்களை சீரமைத்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

இவருக்கு திமுகவின் தேர்தல் அறிக்கையும், மகளிருக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் அறிவிப்பும், கூட்டணி பலமும் சாதகமாக உள்ளன.

அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.எஸ்.ராஜேஷ், கடந்த 15 ஆண்டுகளாக இத்தொகுதியில் வலம்வந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

இவரது நலத்திட்ட உதவிகளும், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளான இலவச பிரிட்ஜ், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்ற அறிவிப்புகளும் பலமாக உள்ளன.

தவெக சார்பில் போட்டியிடும் மரிய வில்சன் புதுமுகமாக இருந்தாலும், விஜய் என்ற ஸ்டார் வெளிச்சம் அவருக்கு மிகப்பெரும் பலமாக இருக்கிறது. மேலும் ஒரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.

இத்தொகுதியில் உள்ள தலித் மற்றும் கிறிஸ்தவர்கள் வாக்குகளை பிரிப்பார் என்றும், அதனால் திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு பெரும் சவாலாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில், இத்தொகுதியில் திமுக, அதிமுக, தவெக ஆகிய 3 கட்சிகளின் வேட்பாளர்களும் சம பலத்துடன் மோதுகின்றனர். இதனால் ஆர்.கே.நகர் தொகுதியை ஆட்கொள்ளும் வேட்பாளர் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 93,576

பெண் - 1,14,726

மூன்றாம் பாலினத்தவர் - 97

மொத்த வாக்காளர்கள் - 1,95.856

ஆர்.கே.நகர் தொகுதியை ஆட்கொள்பவர் யார்..?
Chiraiya: மனைவியின் பெட் ரூம் ‘NO’ உரிமை பேசும் கமலேஷ் | திரை தேவதைகள் 12

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in