

தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசைப் பட்டியலில் 22-வதாக இடம் பெற்றுள்ள விருகம்பாக்கம் தொகுதி, சென்னையின் மிக முக்கியமான அடையாளங்களைக் கொண்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மறுசீரமைப்பின்போது விருகம்பாக்கம் தொகுதி உருவாக்கப்பட்டது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான கோயம்பேடு மொத்த விற்பனை வளாகம், சென்னை புறநகர் பேருந்து நிலையம், சினிமா கலைஞர்கள் சங்கமிக்கும் சாலிகிராமம் ஆகியவற்றுடன் காளியம்மன் கோயில், வேம்புலியம்மன் கோயில், ராகவேந்திரா கோயில் என புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களும் இத்தொகுதியின் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
இத்தொகுதியில் திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாறிமாறி வெற்றியைச் சுவைத்துள்ளன. கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பிரபாகர் ராஜா 74,351 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுகவில் களம் கண்ட விருகை ரவி 55,984 வாக்குகள் பெற்றார்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
இத் தொகுதியைப் பொறுத்தவரை, ஆற்காடு சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் குறுகிய சாலைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பொதுமக்களைப் பெரிதும் வதைக்கிறது.
ஜவஹர்லால் நேரு சாலை மற்றும் ஆற்காடு சாலையை இணைக்கும் 100 அடி சாலையிலும் இதே நிலைதான் உள்ளது. மேலும், கே.கே.நகர் மற்றும் விருகம்பாக்கம் பகுதிகளில் உணவகங்களாலும் கடைகளாலும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஆற்காடு சாலையிலிருந்து கோயம்பேடு சுத்திகரிப்பு நிலையத்துக்குச் செல்லும் பாதாளச் சாக்கடை குழாய்களில் அடிக்கடி ஏற்படும் அடைப்புகளால் கழிவுநீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது.
இதைத் தடுக்க இப்பகுதியில் கூடுதல் ‘மினி நீரேற்று நிலையங்களை’ அமைக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டகால கோரிக்கை இன்னும் காகித அளவிலேயே உள்ளது.
இத்தொகுதியைப் பொறுத்தவரை தென்மாவட்டங்களிலிருந்து குடிபெயர்ந்த மக்களே பெரும்பான்மையாக உள்ளனர். குறிப்பாக நாடார், தேவர் மற்றும் பட்டியல் சமூக மக்களின் வாக்குகளே வெற்றி - தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.
வேட்பாளர்கள் பின்புலம்
இந்தத் தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ பிரபாகர் ராஜாவே மீண்டும் போட்டியிடுகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜாவின் மகனான இவருக்கு, வணிகர் சங்கங்களின் ஆதரவும் ஆளுங்கட்சி பலமும் சாதகமாக உள்ளன.
அதிமுக சார்பில் விருகை ரவி மீண்டும் களம் காண்கிறார். தொகுதியில் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்ட இவருக்கு, அதிமுகவின் நிலையான வாக்கு வங்கி கைகொடுக்கும் என கூறப்படுகிறது. மேலும், அதிமுக - பாஜக - பாமக கூட்டணியின் சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் போட்டியிடுகிறார். தமிழக வெற்றி கழகம் சார்பில் நடிகர் விஜய் தனது ஓட்டுநர் மகன் சபரிநாதனை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். பிரச்சாரத்துக்கு விஜய் நேரில் வருவதாக வாக்குறுதி அளித்துள்ளதால், சபரிநாதன் பிரிக்கும் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகள் திமுகவின் வெற்றி வாய்ப்பை சவாலாக்கக் கூடும்.
கடந்த முறை 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. இந்த முறை தவெக வரவால் தேர்தல் முடிவுகள் எத்தகைய திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எகிற வைக்கிறது.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 95,025
பெண் - 1,01,461
மூன்றாம் பாலினத்தவர் - 50
மொத்த வாக்காளர்கள் - 1,96,536