கோட்டையை தக்க வைக்குமா அதிமுக? - உடுமலை தொகுதியில் வெற்றியை எதிர்பார்க்கும் திமுக

கோட்டையை தக்க வைக்குமா அதிமுக? - உடுமலை தொகுதியில் வெற்றியை எதிர்பார்க்கும் திமுக
Updated on
2 min read

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தின் முக்கியத் தொகுதிகளில் ஒன்று உடுமலைப்பேட்டை. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இத்தொகுதி, விவசாயமும், தென்னை நார் தொழிற்சாலைகளும் நிறைந்த ஒரு செழிப்பான பகுதி.

1951-ல் உருவாக்கப்பட்ட இத்தொகுதி, பல அரசியல் மாற்றங்களைக் கண்டிருந்தாலும், கடந்த சில தேர்தல்களில் அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது.

தொகுதி ஒரு பார்வை

சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் படி, இத்தொகுதியில் சுமார் 2,30,976 வாக்காளர்கள் உள்ளனர். கொங்கு வேளாள கவுண்டர்கள் பரவலாக உள்ள உடுமலை தொகுதியில், பட்டியலின மக்கள், நாயக்கர், செட்டியார் மற்றும் தேவர் உள்ளிட்ட பிற்பட்ட சமூகத்தினரும் கணிசமாக வசிக்கின்றனர். தெலுங்கு பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இவர்களின் வாக்குகளே வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. கடந்த 1951 முதல் 2021 வரை நடந்துள்ள 14 தேர்தல்களில் அதிமுக அதிகபட்சமாக 7 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய 2 தேர்தல்களிலும் அதிமுக-வின் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தொடர்ந்து வெற்றி பெற்று பலமான நிலையில் உள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு

உடுமலை நகராட்சியை ஒட்டிய ஊராட்சிகளை இணைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. நகரில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு, திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும் என தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

படித்து முடித்த இளைஞர்கள் வேலை தேடி சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களை நோக்கி செல்வது அதிகரித்து வருகிறது. இதனை மாற்றும் வகையில் தொழில் நிறுவனங்கள் அமைத்து வேலைவாய்ப்பு ஏற்படுத்திதர வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரமாகப் பார்க்கப்படும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்தி, பாசன வசதியை மேம்படுத்த வேண்டும். தென்னை மற்றும் காய்கறி விவசாயம் அதிகம் என்பதால், அவற்றுக்கு உரிய விலை கிடைக்கவும், மதிப்புக்கூட்டு தொழிற்சாலைகள் அமைக்கவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

களத்தில் நிற்கும் வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திமுக சார்பில் மு.ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் ம.ராம்குமார், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஜி.எஸ்.சங்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தனது செல்வாக்கை 3-வது முறையாக நிலைநாட்டப் போராடுகிறார். மறுபுறம், 25 ஆண்டுகள் என்ற நீண்ட இடைவெளிக்குபிறகு இத்தொகுதியை கைப்பற்ற திமுக கூட்டணி தீவிர முனைப்பு காட்டி வருகிறது. நாம் தமிழர் கட்சி மற்றும் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைத்து களமிறங்கி யுள்ளன.

குடிநீர், விவசாயப் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு, நகராட்சி விரிவாக்கம், போக்குவரத்து நெரிசல், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதி உள்ளிட்ட பிரச்சினைகள் இத்தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும். வெற்றி கோட்டையைத் தக்கவைக்குமா அதிமுக அல்லது திமுக விரும்பும் புதிய மாற்றம் நிகழுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,10,178

பெண் - 1,20,771

3-ம் பாலினத்​தவர் - 27

மொத்த வாக்​காளர்கள் - 2,30,976

கோட்டையை தக்க வைக்குமா அதிமுக? - உடுமலை தொகுதியில் வெற்றியை எதிர்பார்க்கும் திமுக
அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in