

தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசைப் பட்டியலில் 33-வதாக இடம் பெற்றுள்ள திருப்போரூர் தொகுதி, சென்னையின் புறநகர் தொகுதியாக முக்கிய அடையாளம் கொண்டதாக உள்ளது.
கந்தசுவாமி கோயில், நித்தியகல்யாண பெருமாள் கோயில், தலசயன பெருமாள் கோயில், கோவளம் மசூதி, பல்லவ மன்னர்களின் சிற்பங்களை கொண்ட சர்வதேச சுற்றுலாதலமான மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய அடையாளங்கள் உள்ளன.
கடந்த 1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும் மற்றும் பாமக ஒருமுறை என வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் கோதண்டபாணி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எனினும், கடந்த 2018-ம் ஆண்டு சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானது. இதனால், 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் திமுகவின் இதயவர்மன் வெற்றி பெற்றார்.
பின்னர், 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திருப்போரூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விசிகவை சேர்ந்த எஸ்.எஸ்.பாலாஜி 93,954 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மீனவ மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.
மேலும், மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையான தூண்டில் வளைவு, மீன் இறங்குதளம் உள்ளிட்டவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. மாமல்லபுரத்தில் சாலை வசதிகள், அரசு விடுதிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சிகிச்சை வழங்கும் வகையிலான பல்நோக்கு மருத்துவமனை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.
இதுதொடர்பாக, இப்பகுதி பொதுமக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் வலியுறுத்தி வரும் நிலையிலும், இதுவரை நிறை வேற்றப்படவில்லை. திருப்போரூர் பேரூராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊராட்சிகள் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் என வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது.
மேலும், கிராமப் பகுதிகளில் உள்ள விளை நிலைங்களின் ஆழ்துளை கிணறுகளின் மூலம் குடிநீர் பெற்று புறநகர்களில் லாரிகளில் வழங்கப்படுகிறது. இதனால், விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையை மேம்படுத்தி, திருப்போரூர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
திருக்கழுக்குன்றத்தில், மலைமீது அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலை பக்தர்கள் கிரிவலம் வருவதால், கிரிவலப்பாதையை சீரமைத்து பத்கர்கள் தங்கும் விடுதிகளை அமைக்க வேண்டும் மற்றும் ரோப்கார் திட்டத்தை தாமதப்படுத்தாமல் செயல்படுத்த வேண்டு்ம் என்பது உள்ளூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
மாமல்லபுரம் மற்றும் கடப்பாக்கம் அருகே மானிய விலை டீசல் நிலையம் அமைக்க வேண்டும் மற்றும் கான்கிரீட் வீடுகள் அமைத்து தரவேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தொகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் வன்னியர் அதிகளவில் வசிக்கின்றனர்.
தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இவர்கள் உள்ளனர். பிற இனத்தவர்களும் கணிசமாக உள்ளனர். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக வழக்கறிஞர் பாலு போட்டியிடுகிறார்.
அதேபோல், திமுக கூட்டணி சார்பில் விசிகவை சேர்ந்த பன்னீர்தாஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும், நாம்தமிழர் கட்சியின் சார்பில் அம்பேத்ராஜன், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விஜயராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தொகுதிக்கு அனைவருமே புதுமுகமாக உள்ளனர். இதனால் இத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,01,308
பெண் - 1,03,975
மூன்றாம் பாலினத்தவர் - 61
மொத்த வாக்காளர்கள் - 2,05,344