

சைவ சமய பக்தி நெறி பரப்பி தேவாரம் அருளிய திருஞானசம் பந்தர், திருமங்கை ஆழ்வார், உலகெங்கும் தமிழ் இசையை பரப்பிய தமிழிசை மூவர் பிறந்த புண்ணிய பூமியாக சீர்காழி (தனி) தொகுதி விளங்குகிறது.
இந்த தொகுதியில் சீர்காழி நகராட்சி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி, சீர்காழி, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. சீர்காழி தொகுதியில் விவசாயம், மீன்பிடித் தொழில் பிரதானமாக இருந்து வருகிறது.
பிரம்பு நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பு, கோரை பாய் தயாரிப்பு மற்றும் கொள்ளிடம் படுகை கிராமங்களில் மலர், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர்கள், வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அடுத்தபடியாக சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக 5, காங்கிரஸ் 3, இந்திய கம்யூனிஸ்ட், சுயேச்சை தலா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.பன்னீர்செல்வம் 94,057 வாக்குகள், அதிமுக வேட்பாளர் பி.வி.பாரதி 81,909 வாக்குகள் பெற்றனர். 12,148 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார்.
கடும் முயற்சியில் வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட தற்போதைய எம்எல்ஏ பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர்
ஆர்.செந்தில்செல்வன் உதயசூரியன் சின்னத்திலும், அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ ம.சக்தி, நாதக மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ரா.சுபாஷ், தவெக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் சி.எஸ்.கோபிநாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் தொகுதியை மீண்டும் தக்கவைக்க திமுகவினர் கடும் முயற்சி எடுத்துவருகின்றனர். 2-வது முறையாக வெற்றிபெற்றுவிட வேண்டும் என அதிமுக வேட்பாளரும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாதக வேட்பாளர் சுபாஷ் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தவெக வேட்பாளர் சி.எஸ்.கோபிநாத் களத்தில் சுழன்று வருகிறார்.
தொகுதியில் உள்ள பிரச்சினைகள்
* தொழில் வளர்ச்சி மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது. ஆண்டுதோறும் மழை வெள்ளத்தில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை சேமிக்க சேமிப்புக் கிடங்குகளை அதிகப்படுத்துவது. கொள்ளிடம் ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, உப்பு நீர் உட்புகாமல் தடுக்க வேண்டும்.
* சீர்காழி நகரப் பகுதியில் பொதுவிநியோக குடிநீர், புதை சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதுடன், கடற்கரையோர கிராமங்களில் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். சீர்காழி-பனங்காட்டாங்குடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நிரந்தர இடத்தில் கட்டிடம் மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்துத்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிப்பவருக்கு வாக்களிக்க உள்ளதாக தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை வென்றவர்கள்
1952 - சி.முத்தையாபிள்ளை - காங்கிரஸ்
1957 - கே.பி.எஸ்.மணி(தனி), சி.முத்தையாபிள்ளை - காங்கிரஸ்
1962 - ஆர்.தங்கவேல் - காங்கிரஸ்
1967 - கே.பி.எஸ்.மணி - சுயேச்சை
1971 - எஸ்.வடிவேல் - இந்திய கம்யூனிஸ்ட்
1977 - கே.சுப்ரவேலு -திமுக
1980 - கே.பாலசுப்பிரமணியன் - அதிமுக
1984 - கே.பாலசுப்பிரமணியன் - அதிமுக
1989 - எம்.பன்னீர்செல்வம் - திமுக
1991 - டி.மூர்த்தி - அதிமுக
1996 - எம்.பன்னீர்செல்வம் - திமுக
2001 - என்.சந்திரமோகன் - அதிமுக
2006 - எம்.பன்னீர்செல்வம் - திமுக
2011 - ம.சக்தி - அதிமுக
2016 - பி.வி.பாரதி - அதிமுக
2021 - எம்.பன்னீர்செல்வம் - திமுக
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண் வாக்காளர்கள் - 1,18,809
பெண் வாக்காளர்கள் - 1,20,647
மூன்றாம் பாலினத்தவர் - 13
மொத்த வாக்காளர்கள் - 2,39,469