செங்கம் தொகுதியில் செழிப்பான வெற்றி யாருக்கு?

செங்கம் தொகுதியில் செழிப்பான வெற்றி யாருக்கு?
Updated on
2 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் (தனி) தொகுதி விவசாயத்தை பின்னணியாக கொண்டது. சம்பங்கி, மல்லி, முல்லை பூக்கள் உற்பத்தியும் அதிகளவில் உள்ளன. ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள சில கிராமங்கள் என மொத்தம் 44 ஊராட்சிகளும், 2 ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட செங்கம் பகுதிகளை உள்ளடக்கியது.

சென்னகேசவ மலைகளுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 1958-ல் காமராஜரால் கட்டப்பட்ட சாத்தனூர் அணை சிறந்த சுற்றுலா தலம் என்பதுடன், தொகுதியின் மிக முக்கிய அடையாளமாகவும் உள்ளது. சாத்தனூர் அணை பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய முதலை பண்ணை உள்ளது.

திருவண்ணாமலை மாநகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளுடன் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்துக்கான பாசன வசதியையும் சாத்தனூர் அணை அளிக்கிறது. ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் காட்டாறுகளில் இருந்து வரும் தண்ணீரை சேமிக்க குப்பநத்தம் அணை கட்டப்பட்டுள்ளது.

கடந்த 1951-ம் ஆண்டு முதல் இது வரை 16 சட்டப்பேரவை தேர்தல்களை செங்கம் சந்தித்துள்ளன. இதில், 6 முறை திமுகவும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், தேமுதிக, ஜனதா கட்சி, பொது நலக்கட்சி தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. 2026 தேர்தலில் திமுக சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமைச்சர் எ.வ.வேலுவின் முரட்டு பக்தரான தற்போதைய எம்எல்ஏ மு.பெ.கிரி போட்டியிடுகிறார்.

செங்கம் தொகுதியில் கடந்த 1977, 1980, 1984 என தொடர்ந்து 3 முறை அதிமுகவின் எம்எல்ஏவாக வெற்றிபெற்ற சாமிக்கண்ணு என்பவரின் மகன் எஸ்.வேலு அதிமுக வேட்பாளராக களம் காண்கிறார். தவெக சார்பில் பாரதிதாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஷோபா மற்றும் சயேட்சைகள் உட்பட மொத்தம் 15 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

செங்கம் (தனி) தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் புதிய அரசு கல்லூரி, செங்கம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை முன்னிறுத்தி எம்எல்ஏ மு.பெ.கிரி வாக்கு சேகரித்து வருகிறார்.

செங்கம் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் உட்பட திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை குறைகூறியும் அதிமுகவின் தேர்தல் அறிவிப்புகளை கூறியும் எஸ்.வேலு தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். தவெக, நாதகட்சியினர் வழக்கமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்ட நாள் கோரிக்கைகள்

* தொகுதியில் விவசாயம் முதன்மை தொழிலாக இருப்பதால் சேமிப்பு கிடங்குகள், சிறுதானியங்கள் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்.

* பூக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

* விவசாயிகளுக்கான குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்.

* மேல்செங்கத்தில் மூடப்பட்ட 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மத்திய, மாநில அரசின் விதை பண்ணையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

* செங்கம் நகராட்சி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

* செங்கம் அரசு மருத்துவமனையில் அனைத்து மருத்துவ சேவைகளையும் வழங்க வேண்டும்.

* தானிப்பாடி அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும்.

* செங்கம் தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமங்களில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

* சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

செங்கத்தில் வென்றவர்கள்

  • 1951 - ராமசாமி - பொது நல கட்சி

  • 1957 - கரிய கவுண்டர் - காங்கிரஸ்

  • 1962 - சின்னராஜி - திமுக

  • 1967 - சந்தானம் - திமுக

  • 1971 - பாண்டுரங்கம் - திமுக

  • 1977 - சாமிக்கண்ணு - அதிமுக

  • 1980 - சாமிக்கண்ணு - அதிமுக

  • 1984 - சாமிக்கண்ணு - அதிமுக

  • 1989 - சேட்டு - ஜனதா கட்சி

  • 1991 - வீரபாண்டியன் - அதிமுக

  • 1996 - நன்னன் - திமுக

  • 2001 - வரதன் - காங்கிரஸ்

  • 2006 - வரதன் - காங்கிரஸ்

  • 2011 - சுரேஷ்குமார் - தேமுதிக

  • 2016 - மு.பெ.கிரி - திமுக

வாக்காளர்கள் விவரம்:

ஆண் - 1,33,674

பெண் - 1,35,310

மூன்றாம் பாலினத்தவர் - 13

மொத்த வாக்காளர்கள் - 2,68,997

செங்கம் தொகுதியில் செழிப்பான வெற்றி யாருக்கு?
தொண்டாமுத்தூர் தொகுதியில் தெறிக்க விடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in