பாளையங்கோட்டை தொகுதியில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லப்போவது யார்?

பாளையங்கோட்டை தொகுதியில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லப்போவது யார்?
Updated on
2 min read

திருநெல்வேலி: பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் 17 வேட்பாளர்கள் களம் காணும் நிலையில், இவர்களிடையே செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல கடும் போட்டி நிலவுகிறது. ஏராளமான கல்வி நிறுவனங்களை கொண்டிருப்பதால் தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் என பெயர்பெற்ற பாளையங்கோட்டை தொகுதி முழுக்க நகர்ப்புற பகுதிகளை உள்ளடக்கியது.

தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் திருநெல்வேலி மாநகராட்சியிலுள்ள பெரும்பாலான வார்டுகள் இத் தொகுதிக்குள் வருகிறது. மாவட்டத்திலுள்ள மற்ற சட்டப்பேரவை தொகுதிகளுடன் ஒப்பிடும் போது பரப்பளவில் குறுகியது. இதனால் இத் தொகுதியில் வாக்காளர்களை குறிப்பிட்ட நாளுக்குள் வேட்பாளர்கள் சந்தித்து ஆதரவு திரட்டி விடுகிறார்கள்.

திமுக 8 முறை வெற்றி

பாளையங்கோட்டை தொகுதியில் 1977-ம் ஆண்டுக்கு பின்பு நடைபெற்றுள்ள 11 தேர்தல்களில் திமுக 8 முறையும், அதிமுக 3 முறையும் வென்றுள்ளன. கடந்த 1996-ம் ஆண்டு முதல் 6 தேர்தல்களாக தொடர்ந்து திமுக வெற்றிபெற்றுள்ளது.

தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு, இத்தொகுதிக்குள் புறநகர்ப் பகுதிகளான சீவலப்பேரி, மேலச்செவல் சுற்று வட்டாரப் பகுதிகள் சேர்ந்திருந்தபோது அதிமுக வென்றுள்ளது. இத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தொடர்ந்து 4 முறை வென்றுள்ளார்.

தற்போதைய தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக ஆகிய 4 கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ அப்துல் வகாப் 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

அதிமுக வேட்பாளராக செய்யது சுல்தான் சம்சுதீன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக மரியஜான், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மருத்துவர் சங்கரநாராயணன் என்ற சரண் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சிறுபான்மையினர் அதிகம்

இத்தொகுதியில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினர் அதிகம் வசிப்பதால் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களையே பிரதான கட்சிகள் தேர்தல்கள்தோறும் நிறுத்தி வருகின்றன.

1996-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தொடர்ச்சியாக இஸ்லாமியர்களே இங்கு வெல்வதால் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் இஸ்லாமியர்களையே மீண்டும் களமிறக்கியுள்ளது.

ஆனால் இந்த தேர்தலில் இஸ்லாமிய சமூக இளைஞர்கள், பெண்கள் மத்தியில் தவெக மீதான ஆர்வம் காணப்படுவதால் வாக்குகள் பிரியும் என்று கணிக்கப்படுகிறது. மண்ணின் மைந்தர் முழக்கம், கோரிக்கைகளை நிறைவேற்றாமை என்றெல்லாம் பல்வேறு சவால்களை திமுக வேட்பாளரும், ஏற்கெனவே எம்எல்ஏவாக இருந்தவருமான அப்துல்வகாப் எதிர்கொள்கிறார்.

பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. முருகன்குறிச்சி முதல் வண்ணார்பேட்டை வரையிலான புதிய சாலைப்பணி முடக்கம், குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலப் பணி தாமதம் ஆகியவை அப்துல்வகாபின் செயல்பாடுகள் மீது வாக்காளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொருநை அருங்காட்சியகம், காயிதே மில்லத் நினைவு நூலகம் கொண்டு வந்துள்ளதை எடுத்துக் கூறியும், பாஜகவின் முகமாகவே அதிமுக திகழ்வதாக கூறியும் அப்துல்வகாப் வாக்குசேகரிக்கிறார். அதிமுக வேட்பாளராக இளைஞரான செய்யது சுல்தான் சம்சுதீனுக்கு இத் தொகுதியில் உள்ள முக்குலத்தோர், யாதவர், இந்து நாடார் உள்ளிட்ட சமூக மக்களின் வாக்குகள் கிடைக்கும் என்பது இவருக்கு பலம்.

ஆனால், பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் இஸ்லாமியர்கள் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமாரின் மகனான சங்கரநாராயணன் என்ற சரண் களமிறக்கப்பட்டுள்ளார்.

அரசியலுக்கு புதுமுகமான இவருக்கு, தந்தையின் செல்வாக்கால் தொண்டர்கள் சுறுசுறுப்புடன் வாக்கு சேகரிப்பதும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக வந்து பிரச்சாரம் செய்துள்ளதும் பலம்.

ஆனால் இஸ்லாமியர்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு போதிய வரவேற்பு இல்லாதது பலவீனமாக தென்படுகிறது. தவெக வேட்பாளராக கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்ந்த மரிய ஜான் களமிறக்கப்பட்டுள்ளார்.

இத்தொகுதியில் அதிகமுள்ள கத்தோலிக்க, தென்னிந்திய திருச்சபை கிறிஸ்தவர்களின் வாக்குகள் கிடைக்கும் என்றும், சமூக மற்றும் மத பாகுபாடின்றி இளைஞர்களின் வாக்குகள் தவெகவுக்கு கிடைக்கும் என்றும் மரியஜான் தரப்பு நம்புகிறது. சமீபத்தில் கட்சி தலைவர் விஜய் நேரடியாக வந்து பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோ நடத்தியுள்ளதால் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

வாக்காளர்கள் விவரம்

  • ஆண் - 1,24,935

  • பெண் - 1,32,376

  • மூன்றாம் பாலினத்தவர் - 18

  • மொத்த வாக்காளர்கள் - 2,57,329

பாளையங்கோட்டை தொகுதியில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லப்போவது யார்?
சாத்தூர் தொகுதியில் சாதிக்கப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in