

சென்னை: பருவமழை குறைவால் சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. தற்போது எல் நினோ தாக்கத்தால், தென்னிந்திய அளவில் செப்.30-ம் தேதியுடன் நிறைவடைந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் வழக்கத்தை விட 24 சதவீதம் குறைவாக மழை கிடைத்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இந்த காலகட்டத்தில் வழக்கமாக 32.8 செ.மீ மழை கிடைக்கும். ஆனால் வழக்கத்தை விட 20 சதவீதம் குறைந்து 26 செ.மீ மழை மட்டுமே கிடைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூலை மாதமே அரிசி விலை உயர்ந்து இருந்தது. தற்போது மேலும் உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய், பருப்பு விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
இது தொடர்பாக வேலூர் மாவட்டம், வெட்டுவானத்தில் இயங்கும் அகரமாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் எஸ்.வெங்கடேசன் கூறியதாவது: இதற்கு முன்பு நாங்கள் தமிழகம், ஆந்திரா, கர்நாடக பகுதிகளில் இருந்து வேர்க் கடலை கிலோ ரூ.90 முதல் ரூ.105 வரை கொள்முதல் செய்தோம். பருவமழை குறைவு காரணமாக தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் வேர்க்கடலை கிடைக்கவில்லை.
அதனால் வட மாநிலங்களில் இருந்து கொண்டு வருகிறோம். இப்போது கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை உயர்ந்துள்ளது. இதனால் நாங்கள் இதுவரை விற்று வந்த மரச்செக்கு கடலை எண்ணெய் ஒரு லிட்டர், ரூ.240-லிருந்து ரூ.260ஆக உயர்த்தி இருக்கிறோம். இதேபோல் நல்லெண்ணெய், பருப்பு விலையும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.