

சென்னை: பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைவருக்கும் ஏற்ற வகையில் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் (2026- 27) பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து, பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக கள ஆய்வு செய்த அதிகாரிகள், அப்பகுதி மக்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துகளை கேட்டறிந்து இறுதி முடிவு எடுக்க முதல்வருக்கு சில அவகாசம் தேவை. இவ்விவகாரத்தில் முதல்வர் விஜய் அனைவருக்கும் ஏற்ற வகையில் ஒரு நல்ல முடிவை எடுப்பார். தமிழகத்தில் சிங்கப்பெண் திட்டம் தொடங்கப்பட்டு பின்பு பல்வேறு நல்ல விஷயங்கள் நடந்துள்ளன.
பல பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இத்திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும்போது, இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். இடைத்தேர்தலை பொறுத்தவரை தவெகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது. பொதுவாக இடைத்தேர்தலின் போது ஆளுங்கட்சியின் ஆதிக்கம், அதிகார துஷ்பரயோகம் இருக்கும். ஆனால் முதல்முறையாக இடைத்தேர்தல் எந்தவித வன்முறையும் இன்றி மிகவும் நாகரிகமாக நடைபெற்றுள்ளது.
தவறான தகவல்: மதுரை அழகர்கோயிலில் தமிழ் எழுத்துகளை நீக்கிவிட்டு, இந்தி எழுத்துகளை மட்டுமே வைத்திருப்பதாக யாரோ ஒருவர் வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பி உள்ளார். ஆனால் அங்கு தமிழ் எழுத்துகள் நீக்கப்படவே இல்லை. அதேபோல் தேர்தலுக்காக ரூ.31 கோடி செலவு செய்ததாக வேட்பாளர் சத்யபாமா பேசியதாக, ஒட்டி, வெட்டி, ஏஐ மூலம் மாற்றி தயார் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டனர். திட்டமிட்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண் வேட்பாளர் மீது மாற்று கட்சியினர் கருத்து வன்முறையை திணிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.