

புதுடெல்லி: திருவள்ளூர் மாவட்டம்,பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த ஆலையில் அமோனியா வாயு கசிந்து தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து, ‘தி இந்து’ நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா தலைமையிலான அமர்வு தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்கை விசாரித்தது.
இது தொடர்பாக, பிறப்பித்துள்ள உத்தரவில், இந்த ஆலையில் தொழிற்சாலை பாதுகாப்பு விதிகள், அபாய ஒலி எழுப்பும் ஏற்பாடு, தீத்தடுப்பு கருவிகள் உள்ளிட்டவை இல்லாமல் பல்வேறு விதி மீறல்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த மண்டல அலுவலகத்தின் பிராந்திய அதிகாரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடுத்த விசாரணை தேதிக்கு முன்னதாக ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை சென்னையில் உள்ள தென்மண்டல அமர்வில் ஆக.31-ம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டுள்ளது.