

தவெகவில் இணைப்பு விழாவுக்காக மதகுபட்டி அருகே பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மேடை.
சிவகங்கை: தவெகவில் 10,000 பேரை இணைக்கும் விழாவுக்கு, சிவகங்கையில் பல லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்ட மேடை தயாரான நிலையிலும், அமைச்சர் ஆனந்த் தேதி ஒதுக்காததால் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி தவித்து வருகிறார்.
காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராகவும், கார்த்தி சிதம்பரம் ஆதரவாளராகவும் இருந்த சி.ஆர். சுந்தர்ராஜன் சட்டப்பேரவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். தனக்கு ப.சிதம்பரம், கார்த்திசிதம்பரத்தின் ஆதரவு இருப்பதால், எப்படியும் சீட் கிடைத்துவிடும் என நம்பினார்.
இதற்காக அவர், பல லட்ச ரூபாய் செலவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பிறந்தநாளை கொண்டாடினார். பல கிராமங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.
கோயில்களில் அன்னதானம் வழங்கியதோடு, கட்சியினருக்கு பொங்கல் சீதனமும் வழங்கினார். பிரம்மாண்டமான முறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார்.
ஆனால், கடந்த தேர்தலில் சிவகங்கை தொகுதி முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸூக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மேலூர் தொகுதியாவது தனக்கு ஒதுக்கப்படும் என சி.ஆர்.சுந்தர்ராஜன் எதிர்பார்த்தார். அதுவும் தற்போது அமைச்சராக இருக்கும் விஸ்வநாதனுக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால், கடும் அதிருப்தி அடைந்த சி.ஆர்.சுந்தர்ராஜன், காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தேர்தல் நடப்பதற்கு முன்பாக அறிவித்தார்.
பின்னர் அமைதியாக இருந்த அவர், தவெக ஆட்சிக்கு வந்ததும், அக்கட்சியில் இணைய முடிவெடுத்தார். மேலும் இணைப்பு விழாவை 10,000 பேருடன் இணையும் வகையில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்தார். இதற்கு அமைச்சர் ஆனந்த் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், ஜூலை 19-ம் தேதி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக, சிவகங்கை அருகே மதகுபட்டியில் சுமார் ரூ. 2 கோடி செலவில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சொன்னபடி ஜூலை 19-ம் தேதி விழா நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது. வேறு தேதியில் விழா நடத்தவும், அமைச்சர் ஆனந்த் இதுவரை ஒப்புதல் தரவில்லை. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் சி.ஆர்.சுந்தர்ராஜன் தவித்து வருகிறார்.
மேலும், கூட்டணிக் கட்சியிலிருந்து வரும் நிர்வாகிகளை திமுக சேர்க்காமல் இருந்தது. அதேபோல், தவெகவும் கடைப்பிடிக்க வேண்டுமென கார்த்திசிதம்பரம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதனால் அவர் தரப்போ அல்லது காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம்தாகூர் தரப்போ இந்த விழாவுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளதா என சந்தேகத்தை சிலர் எழுப்பி வருகின்றனர்.