

காட்டுப்பாக்கம் கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கால்நடை பண்ணையாளர் கள் பற்றிய கையேட்டை தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத்துறை செயலாளர் என்.சுப்பையன் வெளியிட, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் சா.ப.அம்ரித், துறையின் முன்னாள் இயக்குநர் இரா.கண்ணன், பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) இர.நரேந்திர பாபு உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் உள்ள கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையத்தில், ‘பன்றி இறைச்சி மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பன்றி இறைச்சிப் பொருட்களை பிரபலப்படுத்துவதன் மூலம் பன்றி வளர்ப்பை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெண்பன்றி வளர்க்கும் சுமார் 100 பண்ணையாளர்கள் இதில் பங்கேற்றனர். “பன்றி இறைச்சிக்கான நுகர்வோர் கேரள மாநிலத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும்தான் அதிகம் உள்ளனர்.
இந்தச் சூழலில், பன்றிக் காய்ச்சலைக் காரணம் காட்டி ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதல் சில மாதங்களுக்கு கேரளத்துக்கு பன்றி கொண்டுசெல்ல அம்மாநில அரசு தடை விதிக்கிறது. இதனால் பன்றி வளர்ப்போர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பண்ணையாளர்கள் வலியுறுத்தினர்.
கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் டாக்டர் சுப்பையன், “இந்தப் பிரச்சினை தொடர்பாக இரு மாநில அரசுகளின் அதிகாரிகள் குழு கலந்துபேசி, தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று உறுதியளித்தார்.
மேலும், “மின் கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பிரச்சினைகளால் பன்றி வளர்ப்போருக்கு ஏற்படும் பாதிப்புகளை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். பன்றி இறைச்சியை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்பல்கலை.
துணைவேந்தர் (பொறுப்பு) இர.நரேந்திர பாபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கால்நடை பராமரிப்பு, மருத்துவப் பணிகள் இயக்குநர் சா.ப.அம்ரித், துறையின் முன்னாள் இயக்குநர் இரா.கண்ணன், கால்நடை உற்பத்தி கல்விமைய இயக்குநர் சு.மீனாட்சிசுந்தரம், பல்கலை. ஆராய்ச்சி இயக்குநர் இரா.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்க ஏற்பாடுகளை கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர், தலைவர் பா.டென்சிங் ஞானராஜ் செய்திருந்தார்.