

சென்னையில், அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், பேராயர்கள், ஆயர்களுடன் இணைந்து அதிமுக பொது செயலாளர் பழனிசாமி ‘கேக்’ வெட்டினார். | படம்: எஸ். சத்தியசீலன் |
சென்னை: அதிமுக சார்பில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்று ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், இஸ்திரிப்பெட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்றுசக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் அடங்கிய பரிசுப் பைகளை வழங்கினார்.
பின்னர், நிகழ்ச்சியில் பழனிசாமி பேசியதாவது: பரம்பரையாக தாங்களே பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, வாக்கு வங்கிக்காக ஆட்டுத்தோலை போர்த்திக் கொண்டு வரும் ஓநாய் கூட்டத்தினரிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தீய சக்திகளிடம் நாம் ஏமாந்து போய்விட்டால், பின்னர் ‘விடியல்’ என்பதே இருக்காது. தமிழகம் இருளில் மூழ்கி விடும். எனவே நாம் விழிப்புடன் செயல்படும் காலம் இது.
சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசின் மூலம் கிடைத்து வந்த பல நலத்திட்டங்கள் திமுக ஆட்சிக்கு வந்த இந்த 55 மாத காலத்தில் கிடைப்பதில்லை. எம்ஜிஆர் தொடங்கி, இன்று வரை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூக நல்லிணக்க இயக்கம் அதிமுக. சிறுபான்மை மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாக இருக்கும் இயக்கம்.
எனவே, சிறுபான்மை சமுதாய மக்கள் வரும் தேர்தலில் விழிப்போடு செயல்பட்டு தீய சக்திகளை அடையாளம் கண்டு, அவர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தி, தமிழகத்தில் நடக்கும் சீர்கேட்டை களைய அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செம்மலை, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வைகைச்செல்வன், பெஞ்சமின், இன்பதுரை எம்.பி. மாவட்டச் செயலாளர்கள் தி.நகர் சத்யா, வி.எஸ்.பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.