

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் காரணமாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் தங்களது பதவியை தாமாக முன்வந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
அரசுக்கும், நீதித்துறைக்கும் இணைப்புப் பாலமாக செயல்படவும், அரசு தரப்பில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடவும் தமிழக அரசின் பிரதிநிதிகளாக செயல்படவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சட்ட அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம்.
எந்தக் கட்சி ஆட்சியமைக்கிறதோ அக்கட்சியின் வழக்கறிஞர்கள் சட்ட அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், மாநில அரசு ப்ளீடர், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் சிவி்ல், கிரிமினல் துறைகளுக்கான அரசு வழக்கறிஞர்கள் என 100-க்கும் மேற்பட்ட பதவிகளை பிடிக்க சென்னையிலும், மதுரையிலும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும்.
தற்போது தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில் கடந்த திமுக ஆட்சியில் சட்ட அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் தங்களது பதவியை ஒருவர் பின் ஒருவராக தாமாக முன்வந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
அதன்படி, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டிருந்த ஜெ.ரவீந்திரன், பி.முத்துக்குமார் மற்றும் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அசன் முகமது ஜின்னா ஆகியோர் தாமாக முன்வந்து தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்கள் தமிழக அரசுக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதங்களில் கடந்த 5 ஆண்டுகளாக தங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசின் அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.