

பெரம்பலூர்: முதல்வர் விஜய் குறித்து இழிவாக பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது பெரம்பலூர் எஸ்.பி. அலுவலகத்தில் அரசு மருத்துவர் புகார் அளித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ராசா மணிகண்டன். இவர் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா மீது பெரம்பலூர் எஸ்.பி. லலித்குமாரிடம் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் கடந்த ஜூன் 25-ம் தேதி முன்னாள் அமைச்சர் மதிவாணன்இல்லத் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆ.ராசா, முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசி உள்ளார். இது முதல்வர் பதவியின் கண்ணியத்தையும், மரியாதையையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. ஒரு எம்.பி. பொது வெளியில் இப்படி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.
எனவே அவர் மீது பெரம்பலூர் போலீஸார் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். ஆனால், இந்த மனு மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.