

புதுச்சேரி: “ஆளுநரின் அதிகாரத்தால் மக்களால் தேர்வான அரசு, முதல்வர், அமைச்சர்களுக்கு ஏற்படும் சங்கடங்களுக்கான தீர்வு மாநில அந்தஸ்துதான்,” என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குறிபிட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர் கூறியதாவது: “புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். கடந்த காலத்தில் மாநில அந்தஸ்து பெறுவதில் மாற்றுக் கருத்து இருந்தது. ஆனால் தற்போது இல்லை. நிர்வாக ரீதியில் பல தடைகள் இருப்பதை எம்எல்ஏக்கள், அரசு ஊழியர்கள், மக்கள் அறிந்துள்ளனர்.
மாநில அந்தஸ்து கேட்டு பிரதமர் மோடி தொடங்கி, முன்பு இருந்த பல பிரதமர்களை சந்தித்துப் பேசியுள்ளேன். அப்போதெல்லாம் அவர்கள் ‘பார்ப்போம்’ எனக் கூறுவார்கள். அதனால் மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சில சமயம் அழுத்தம் தந்து பெற வேண்டும், இதற்காக நேரு எம்எல்ஏ டெல்லியில் போராட்டம் நடத்தினார். திமுக எம்.பி சிவா நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.
அதேபோல், புதுச்சேரி எம்.பிக்களும் அங்கேயுள்ள எம்.பி-களை சந்தித்து ஒட்டுமொத்தமாக புதுச்சேரியின் மாநில அந்தஸ்துக்காக குரல் கொடுக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து மாநில அந்தஸ்தை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவது அவசியம்.
புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் மாநிலத்துக்கு மத்திய அரசு நிதி, திட்டங்களை வழங்குகிறது. இருப்பினும் ஒரு குறை உள்ளது. புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனக் கோரினேன். மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.
மாநிலத்தில் ஆளுநருக்குதான் அதிகாரம் என்பதை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உச்ச நீதிமன்றம் வரை சென்று உறுதிப்படுத்தினர். அதனால் தான் துணை நிலை ஆளுநரிடம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, முதல்வர், அமைச்சர்களுக்கு பல சங்கடங்கள் உள்ளன. துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதால் சில முடிவுகளில் நமக்கு சங்கடங்கள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு மாநில அந்தஸ்து பெறுவதுதான்.
கரசூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமையும், கரசூர் தொழிற்பேட்டை வர தாமதத்துக்கு காரணம், ஆளுநர் கோப்பை தேவையில்லாமல் மத்திய அரசுக்கு அனுப்பியதுதான்.
பல நேரங்களில் பணிகள் திட்டங்கள் நிறைவேறாததற்கு தேவையில்லாமல் மத்திய அரசுக்கு கோப்புகளை அனுப்புவதும் ஓர் காரணம். இங்குள்ள சண்டையில் அங்கு அனுப்பினர். அரசின் பல திட்ட கோப்புகள் மத்திய அரசின் அனுமதிக்கு தேவையில்லாமல் அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு, கோப்புகள் தேங்கி, திட்டங்கள் நிலுவையில் கிடக்கின்றன. இதில் மாற்றம் தேவை. தற்போது கோப்புகளை நாம் மத்திய அரசுக்கு அனுப்புவதே இல்லை. இங்கேயே தேவையான முடிவுகளை எடுத்து தீர்வு காண்கிறோம்” என்றார்.