

சென்னை: தமிழக ஆளுநர் அர்லேகர் இன்று டெல்லி செல்கிறார். அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகத் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக தீபாவளி பண்டிகையை ஒட்டிய 2 நாட்களில் 13 கொலைகள் நடைபெற்றன.
இதையடுத்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் விஜய், உயரதிகாரிகளுடன் சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரின் அறிவுறுத்தலின்படி மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டதுடன், ரோந்து பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து 3-வது நாளாக சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைத் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் சட்டத் துறை அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமார், தலைமைச் செயலர் எம்.சாய்குமார், உள்துறை செயலர் ஏ.கார்த்திக், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சிறைத் துறை இயக்குநர் கி.சங்கர், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கடந்த 6 மாத காலமாக நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை, அவற்றின் தற்போதைய நிலை, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மாநில ஆளுநரிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதில், சமீபகாலமாக தமிழகத்தில் நிகழ்ந்துள்ள குற்றச் சம்பவங்கள், மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முறையாக மதிப்பீடு செய்து அறிக்கை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது தமிழகத்தின் தற்போதைய சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், ஆளுநர் அர்லேகர் அறிக்கை சமர்ப்பித்து விரிவாக எடுத்துரைப்பார் என்று தெரிகிறது. தொடர்ந்து ஆளுநர் ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆளுநர் டெல்லி சென்று மத்திய அமைச்சரை சந்திக்க இருப்பதும்,மறுபுறம் முதல்வர் விஜய் தொடர்ந்து 3-வது நாளாக காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருப்பதும் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.