

சென்னை: மாற்றுத் திறனாளிகள் பரிதாபத்துக்கு உரியவர்கள் அல்ல மிகவும் திறமையானவர்கள் அவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின கொண்டாட்டம் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அவர்களின் முன்னேற்றத்துக்காக சேவை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாற்றுத் திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கி ஆளுநர் கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது: மாற்றுத் திறனாளிகள் பரிதாபத்துக்குரியவர்கள் அல்ல. அவர்கள் மிகவும் திறமையானவர்கள், பலசாலிகள். அவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அவர்களும் நம்மை போல் சக மனிதர்கள்தான். அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் நாம் வழங்க வேண்டும்.
அவர்களுக்கு வாய்ப்புகளை நாம் முழுமையாக வழங்க வேண்டும். அவர்களைப் பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு பாதுகாக்கிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதையும் கவுரவத்தையும் அளிக்க வேண்டும். முன்பெல்லாம் மாற்றுத் திறனாளிகள் தேவையான வசதிகளும் அடிப்படை தேவைகளும் கிடைக்காமல் இருந்தது.
தற்போது அரசுத் துறை மற்றும் தனியார் துறையிலும் அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு, புதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. மாரத்தான் போட்டியில் 85 கிலோ மீட்டர் ஓடிய மாற்றுத் திறனாளியைக் கண்டு நான் வியந்தேன். ராஜ்பவன் என்ற பெயரை மாற்றி லோக் பவன் என்று அறிவித்த பின் முதல் நிகழ்ச்சியாக இது நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.